க.பொ.த சாதாரண தரப் பரீட்சை சார்பான மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிக்கும் காலத்தில் மாற்றம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, May 18th, 2022

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றை நடத்துவதற்கு தடைவிதிக்கும் காலத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல், பரீட்சை நிறைவடையும் வரை, குறித்த செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் முன்னர் அறிவித்திருந்தது.

எனினும், இந்தத் தீர்மானத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் அறியப்படுத்தியுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல், பரீட்சை நிறைவடையும் வரையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றை நடத்துவதற்கு தடைவிதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பரீட்சார்த்திகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: