கோணாவில் யூனியன் குளப்பகுதி விவசாயிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக நியாயமான தீர்வு பெற்றுத்தரப்படும் – இணைப்பாளர் தவநாதன் உறுதி!

Friday, April 9th, 2021

கிளிநொச்சி கோணாவில் யூனியன்குளம் பகுதியில் வாழும் நெற்செய்கையாளர்கள் குறித்த குளத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீரை பயன்படுத்தி தொடர்ந்தும் நெற்செய்கையை மேற்கொள்வதற்கான அனுமதியை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டு வருகின்றார் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் அமைச்சரின் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளருமான வை. தவநாதன் மிக விரைவில் அதற்கான தீர்வு வழங்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

காலாகாலமாக குறித்த குளத்தின் மேலதிக நீரை பயன்படுத்தி சிறுபோக நெற்செய்கையை மேற்கொண்டுவந்த ஒரு தொகுதி விவசாயிகளை இம்முறை சிறுபோக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பதில்லை என குறித்த பிரதேச விவசாய அமைப்புகள் தீர்மானம் மேற்கொண்டிருந்தனர்.

குறிபாக இவ்வாறான சிறுபோக நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் குளத்தின் நீரை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும் இதனால் இக்குளத்தின் நீரை நம்பி சிறுபோக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஏனைய விவசாயிகள் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு இவ்வாறான மேலதிக நீரை பயன்படுத்தி சிறுபோகச் செய்கையை மேற்கொள்ளும் நடவடிக்கை தடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் குறித்த மேலதிக நீரை பயன்படுத்தி சிறுபோகத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் இத்தொழில் தமது பொருளாதாரத்துக்கானதென்றும் அதுவே தமது உணவுக்கான மூலதனமென்றும் சுட்டிக்காட்டி தாம் தொடர்ந்தும் அத்தகைய பயிற்செய்கையை மேற்கொள்ள அனுமதியை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம் குறித்த பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் வை. தவநாதன் நேரில் சென்று பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை சந்தித்து நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொண்டதுடன், குறித்த விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றருந்தார்.

இந்நிலையில் விவசாயிகளின் நிலைமைகள் தொடர்பில் கவனத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் தொடர்ந்தும் அந்த விவசாயிகள் சிறுபோகச் செய்கையை மேற்கொள்வதோடு குறிப்பாக ஏனைய விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக இதேபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி ஜெயபுரம் மற்றும் இரணைமடு பகுதிகளிலுள்ள ஒருபகுதி விவசாயிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: