கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் 21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை!

Friday, July 29th, 2022

கோட்டா கோ கம போராட்டச் செயற்பாட்டாளர் தனிஷ் அலி உள்ளிட்ட 21 பேர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜோசப் ஸ்டாலின், முதலிகே, சோசலிச இளைஞர் அணித் தலைவர், அருட்தந்தை ஒருவர் உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, டுபாய் செல்ல முயன்ற வேளை விமானத்துக்குள் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தனிஷ் அலி எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவில் விமானத்தில் வைத்து நேற்று முன்தினம் (26-07-2022) கைது செய்யப்பட்ட காலிமுகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர் தானிஸ் அலி தொடர்பில் பரபரப்பான தகவல் ஒன்று தென்னிங்கை ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டு காரணமாக அவுஸ்திரேலியாவில் இருந்து டனிஸ் அலி நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தகவல் வெளியிட்ட ஒருவர், மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியா சென்று விசா நிபந்தனைகளை மீறி ஓராண்டுக் காலம் தலைமறைவாகியிருந்த டனிஸ் அலி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஐஸ் எனப்படும் போதைப்பொருளுக்கு அடிமையாகி நாட்டிலுள்ள மற்றுமொரு நபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக்குவது தொடர்பான போராட்டத்தின் முன்னின்று செயற்பட்ட டனிஸ் அலி, தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சிக்குள் புகுந்து, ஒளிபரப்புகளுக்கு தடை விதித்ததுடன், நேரடி ஒளிபரப்பும் செய்திருந்தார்.

அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: