கோட்டாபய இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தக்கோரி மனு தாக்கல்!

Friday, August 12th, 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி நாட்டிலேற்பட்ட போராட்டங்களால் மாலைத்தீவுக்குச் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தாய்லாந்தில் பாதுகாப்புக் கோர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் பிரஜையும், முன்னாள் முதற் குடிமகனுமான அவருக்கு இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினாரா அல்லது சதி காரணமாக நாடு கடத்தப்பட்டாரா எனக் கண்டறியக் கோரி கடந்த ஜூலை 18ஆம் திகதி காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டத்திலிருந்து விலகியுள்ளதாகவும், இது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச ராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பதால் 90 நாட்கள் தமது நாட்டில் தங்கலாம் என தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டொன் பிரமுத்வினாய் தெரிவித்தார்.

கோட்டபாயவின் விஜயத்தை இலங்கை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும் தாய்லாந்து அரசாங்கம் அவருக்கு தங்கும் வசதிகளை செய்து கொடுக்காது எனவும் டொன் தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ஆட்சியின் கீழ் இருந்ததால் முரண்பாட்டை ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தாய்லாந்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது என்று கோட்டாபயவிற்கு நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான முதற்கட்ட நேர்முக தேர்வுகள் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்...
எதிர்வரும் 15 தொடக்கம் 17 ஆம் திகதி வரை யாழ் மாவட்டத்தில் உச்சம் கொள்ளும் சூரியன்- அவதானமாக இருக்கும...
சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ச...