கொவிட் பரவலின் தீவிரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அக்கறையின்மையே டெல்டா வைரஸ் பரவ முக்கிய காரணம்!

Friday, June 18th, 2021

நடமாட்ட கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொவிட் பரவலின் தீவிரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அக்கறையின்மையே புதிய டெல்டா தொற்று பரவ முக்கிய காரணம் என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடை – ஆராமய பகுதியில் டெல்டா வைரஸ் திரிபு, ஐவருக்கு உறுதியானமை தொடர்பில் தெரவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் வீரியம் கொண்ட பி.1.617.2 என்ற டெல்டா வைரஸ் திரிபு தொற்றுறுதியான நபர்கள் முதல் முறையாக சமூகத்தில் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த பரவலுக்கான காரணம் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்படி, தெமட்டகொடை ஆராமய பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு குறித்த விடயம் அறிவிக்கப்பட்டபோது, கலாநிதி சந்திம ஜீவந்தர மற்றும் நீலிகா மளவிகே ஆகியோர், இது டெல்டா வைரஸ் திரிபாக இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிட்டனர்.

இதனையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் கடுமையாக்கப்பட்டது.

அத்துடன், தொற்று உறுதியானவர்களின் முதலாவது தொடர்பாளர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் ஒரே வீட்டைச் சேர்ந்த மூவருக்கும், அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த இருவருக்கும் ஆராமய பகுதியில் டெல்டா வைரஸ் திரிபு ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் தடுப்பூசி ஏற்றப்படாதவர்கள். எனினும் இது ஆரம்பக்கட்டமாக உள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், கொழும்பில் தோட்டங்களுக்குள்ளும், தொடர்மாடி குடியிருப்புகளுக்குள்ளும் நடமாட்டங்கள் இடம்பெறுகின்றன.

இதுகுறித்து மேலும் அதிக கவனம் செலுத்தி, முன்னரை விடவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts: