மஹிந்த ராஜபக்சவின் காலத்திலேயே – இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டது – நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டு!

Tuesday, October 24th, 2023

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு திட்டத்துடன் செயற்பட்டு, கொத்மலை, நுரைச்சோலை, உமா ஓயா போன்ற பாரிய திட்டங்களை உருவாக்கி குறைந்த விலையில் நாட்டுக்கு மின்சாரம் வழங்க பாடுபட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டது.

இந்த நாட்டில் மக்களுக்கு மின்சாரம் வழங்கியது மட்டுமன்றி மின்சார கட்டணத்தையும் குறைத்தவர் மஹிந்த ராஜபக்ச தான்.

அத்துடன் அவர் இந்த நாட்டில் மின்சார உற்பத்திக்கான திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாகவே அவ்வாறு செய்ய முடிந்தது.

நாட்டில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பல விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றம் சுமத்தினார்கள். ராஜபக்சக்களும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள். மக்கள் ஒன்றும் அறியாமல் சிந்திக்கப் பழகிவிட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் நாடு ஒரு நாளைக்கு பல மணித்தியாலங்கள் மின்சாரம் இன்றி தவிக்க வேண்டியிருந்தது.

இந்த நாட்டின் முன்னாள் தலைவர்கள் மின்சார உற்பத்திக்கான எந்த திட்டமும் இன்றி உழைத்ததால் இது நடந்தது.

ஆனால் முதல் தடவையாக மஹிந்த ராஜபக்ச ஒரு திட்டத்துடன் பணியாற்றினார் என்று பொதுச் செயலாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: