கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அமைப்பதற்கு அரை பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் உறுதியளிப்பு!

Wednesday, November 8th, 2023

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய பிராந்தியத்திற்கு முக்கியமான உட்கட்டமைப்பை வழங்கக் கூடிய ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிக்கு உதவுவதற்காக அரை பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையினை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (DFC) அறிவித்துள்ளது.

தனது பங்காளரின் அபிவிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவி செய்யும், உள்ளூர் சமூகங்களின் முன்னேற்றத்தில் முதலீடு செய்யும் மற்றும் உள்ளூர் நிதி நிலைமைகளுக்கு மதிப்பளிக்கும் உயர்தர உட்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதியளிப்பை மேற்கொள்வதில் DFC கொண்டுள்ள உறுதிப்பாட்டை இப்புதிய முனையம் பிரதிபலிக்கிறது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு (இந்தியாவுடன் உட்பட) ஆகியவற்றை ஏற்படுத்துவதில் அமெரிக்கா கொண்டுள்ள நீடித்த அர்ப்பணிப்பை இம்முதலீடு மேலும் நிரூபிக்கிறது.

கொழும்புத் துறைமுகத்திற்குள் அமைந்துள்ள ஆழ்கடல் மேற்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திக்கு உதவி செய்வதற்காக Colombo West International Terminal Private Limited நிறுவனத்திற்கு வழங்கப்படும் 553 மில்லியன் டொலர் நிதியளிப்பினை ஆரம்பித்து வைப்பதற்காக DFCஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ஸ்கொட் நாதன் இலங்கைக்கு விஜயம் செய்தார். புதிய முனையத்தை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வௌிநாட்டமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி பணிக்குழுவின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் பிரதம நிறைவேற்று அதிகாரி நாதனுடன் இணைந்து கொண்டனர்.

“எமது பங்காளர்களின் மூலோபாய நிலைகளை பலப்படுத்தும் அதே வேளையில் அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் தனியார் துறை முதலீடுகளை அதிகரிப்பதற்கு DFC பணியாற்றுகிறது. அதைத்தான் கொழும்பு துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் இந்த உட்கட்டமைப்பு முதலீட்டின் மூலம் நாங்கள் மேற்கொள்கிறோம்” என DFC CEO ஸ்கொட் நாதன் கூறினார். “இலங்கை உலகின் முக்கிய போக்குவரத்து இடங்கடப்பு மையங்களில் ஒன்றாகும். உலகில் பயணிக்கும் அனைத்து கொள்கலன் கப்பல்களில் அரைவாசி இலங்கையின் கடல் வழியாகப் பயணிக்கின்றன. மேற்கு கொள்கலன் முனையத்திற்கான 553 மில்லியன் டொலர்களை தனியார் துறை கடன்களாக வழங்கும் DFCயின் அர்ப்பணிப்பானது இலங்கையின் இறையாண்மைக் கடன்களை அதிகரிக்காமல் அதன் கப்பல் திறனை விரிவுபடுத்தி, இலங்கைக்கு அதிக செழிப்பை உருவாக்கும் அதேவேளை பிராந்தியம் முழுவதுமுள்ள எமது நட்பு நாடுகளின் நிலையினையும் பலப்படுத்தும்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

“கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தின் நீண்டகால அபிவிருத்திக்காக DFC இன் 553 மில்லியன் டொலர் முதலீடானது இலங்கையில் தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியை எளிதாக்குவதுடன் இலங்கையின் பொருளாதார மீட்சியின் போது மிகமுக்கியமான அந்நிய செலாவணி வரவுகளையும் ஈர்க்கும். இந்நிதியுதவியானது, இலங்கை மக்களின் அபிவிருத்தி மற்றும் நல்வாழ்விற்கு உதவிசெய்வதற்கு அமெரிக்கா கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பின் அடையாளமாகும். இலங்கை தனது பொருளாதார அடித்தளத்தை மீளப் பெறுவதானது, சுதந்திரமான மற்றும் வளமான இந்தோ- பசிபிக்கிற்கான எமது பகிரப்பட்ட தொலைநோக்கினை மேலும் மேம்படுத்தும்.” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் கூறினார்.

மூலோபாய முக்கியத்துவமுடைய, பொருளாதார ரீதியாக உறுதியான மற்றும் தனியார் துறையால் வழிநடத்தப்படும் செயற்திட்டங்களை ஆதரிப்பதில் DFC எவ்வாறு இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்கான மாதிரியாக இம்முதலீடு அமைகிறது. DFC உலகத்தரம் வாய்ந்த அனுசரணையாளர்களான John Keells Holdings மற்றும் Adani Ports & Special Economic Zones Limited (APSEZ) ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுகிறது. இந்நிறுவனங்களின் உள்ளூர் அனுபவம் மற்றும் உயர்தர தராதரங்கள் உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஆதரிப்பதற்கு உதவி செய்வதுடன், இச்செயற்திட்டத்தை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நீண்ட கால, நிலைபேறான வெற்றியாக மாற்றுவதற்கும் உதவி செய்யும்.

இந்து சமுத்திரத்திலுள்ள மிகப்பெரிய துறைமுகமாகவும் கப்பல்களுக்கிடையே சரக்குகளை மாற்றியேற்றுவதில் மிகவும் பரபரப்பான துறைமுகமாகவும் கொழும்புத் துறைமுகம் விளங்குகிறது. இது 2021ஆம் ஆண்டு முதல் 90 சதவீதத்திற்கும் அதிகமான பயன்பாட்டில் இயங்கி வருகிறது. மேலதிக கொள்ளளவு அவசியம் என்பதை இது குறிக்கிறது. முக்கியமான கப்பல் வழித்தடங்களிலும் இந்த விரிவடையும் சந்தைகளுக்கு அருகாமையிலும் இலங்கை கொண்டுள்ள முக்கியமான அமைவிடத்தைப் பயன்படுத்தி, வங்காள விரிகுடாவில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு இப்புதிய முனையம் சேவையாற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: