கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? – சுகாதார அமைச்சு தகவல்!

Tuesday, March 3rd, 2020

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையர்களை கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தேவையான வழிமுறைகளை சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவித்துள்ளது.

அடிக்கடி கைகளை சவர்காரமிட்டு கழுவிக் கொள்ளுதல், பொது இடங்களில் கைகளினால் முகத்தை தொடுதலை தவிர்த்தல், தும்மலின் போது ரிசு அல்லது கைக்குட்டையை பயன்படுத்தல் என்பன அத்தியாவசியமாகும்.

காய்ச்சல், தடுமல், மூச்சு எடுப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படுமாயின் பொதுமக்கள் நடமாடும் இடங்களிலிருந்து விலகி இருந்தல் கட்டாயமாகும்.

கடந்த 14 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தால் அது தொடர்பில் வைத்தியர் ஒருவரிடம் சென்று பரிசோதிப்பது முக்கியமாகும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வருவோரை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் என்ற சந்தேகத்தில் தொடர்ந்தும் ஐந்து பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: