கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை!

Tuesday, December 22nd, 2020

நாட்டில் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மேல் மாகாணத்தை முடக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் மையமாக கொழும்பு மாறிவிட்டது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது,

தற்போது பண்டிகைக் காலம் ஆரம்பித்துள்ளதால் அக்காலத்தில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க குறைந்தபட்சம் ஜனவரி 1 ஆம் திகதிவரை மேல் மாகாணத்தை முடக்க வேண்டும் என்றும் அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நத்தார் மற்றும் ஆண்டு இறுதி விடுமுறை நாட்களில் மேல் மாகாணத்திலிருந்து பயணங்களை மேற்கொள்வதால் கொரோனா தொற்று ஏனைய மாகாணங்களுக்கும் பரவக்கூடும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும் எதிர்வரும் நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தல் அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: