கொரோனா தொற்றால் இலங்கையில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் பலி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிப்பு!

Tuesday, December 8th, 2020

கொரோனா தாக்கத்தினால் இலங்கையில் 6 மணிநேரத்திற்கு ஒருவர் உயிரிழக்கின்றனர் என்றும் நாளாந்தம் இனம்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தாவிடின் மருத்துவமனைக் கட்டமைப்பும் முடங்கும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், மருத்துவர் ஹரித அளுத்கமே மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தொடர்பில் குளிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. குளிர்காலம் நெருங்கும் நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம். இலங்கையில் கடந்த மாதம்முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக காணப்பட்டது. ஆனால் இப்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக உள்ளது.

நவம்பரில் மட்டும் 100 பேர் இறந்துள்ளனர். அதாவது ஆறு மணிநேரத்திற்கு ஒருவர் மரணிக்கின்றனர். சில நாட்களில் மூன்று மணி நேரத்திற்கு ஒருவர் மரணித்துள்ளார். நிலைமை இவ்வாறு சென்றால் சமாளிக்க முடியாது போக வாய்ப்புள்ளதென்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: