கொரோனா தடுப்பூசி வழங்கலை வலுப்படுத்த இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி!

Tuesday, March 30th, 2021

கொரோனா பெருந்தொற்றுக்கான உதவிகள் உள்ளடங்கலாக தடுப்பூசி வழங்கல் சேவைகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் தடுப்பூசி வழங்கலுக்கான குளிரூட்டல் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் யப்பான் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினூடாக 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான யப்பானியத் தூதுவர் சுகியாமா அகிரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

தற்போது கொரோனாவால்  பாதிக்கப்பட்ட அதிக தாக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட வயதான மக்கள் தொகை உள்ளடங்கலாக முன்னுரிமையளிக்கப்பட்ட குழுக்களுக்காக இலங்கையானது தற்போது தடுப்பூசி வழங்கலை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையின் நீண்ட கால பங்காளர் என்ற வகையில் கொவிட்-19 இற்கு எதிரான எமது இணைந்த முயற்சியில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினூடாக அவசர கால நிதியுதவியை வழங்குவது எமக்கு பெருமையாக உள்ளது.

குளிரூட்டப்பட்ட விநியோகச் சங்கிலி திட்ட கருவிகள் மற்றும் அதுசார்ந்த தொழிநுட்ப உதவிகளின் கொள்வனவு என்பது நாடு முழுவதிலும் தடுப்பூசியின் சமமான அணுகல் மற்றும் துரித பகிரலை உறுதி செய்யும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

இதனிடையே சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதற்காக கொவெக்ஸ் வசதியின் ஊடாக, மார்ச் மாதத்தில், முதல் தொகுதியான 264,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ராஷெனக்கா கொவிஸீல்ட்டு தடுப்பூசிகளை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தருவித்து வழங்கியிருந்தது.

யப்பானிய அரசாங்கத்தின் இந்த உதவியானது, கொவிட்-19 தடுப்பூசி நிகழ்ச்சிகளை பெறுதல், சேமித்தல் மற்றும் வழங்குதல் உள்ளடங்கலாக இலங்கையின் ஒட்டுமொத்த தடுப்பூசி வழங்கல் முறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: