கொரோனா சோதனை தொகுதிகளுக்கு தட்டுப்பாடு- அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் மட்டும் பரிசோதனை – நாளை முக்கிய தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்ப்பு!

Thursday, February 10th, 2022

கொரோனா பரிசோதனை தொகுதிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலேயே சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஏறத்தாள 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

டெல்டா அலையுடன் ஒப்பிடும்போது, பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைவாகவே இருந்தபோதிலும், நோய்த்தொற்று ஏற்பட்டால் அறிகுறிகளைக் குறைப்பதற்காக  தாமதமின்றி பூஸ்டர் டோஸ்களைப் பெறுமாறு சுகாதார நிபுணர்கள் மக்களை வலியுறுத்தினர்.

பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றவர்களில் இலங்கை இன்னும் குறைந்த சதவீதத்தைக் காட்டுவதாகவும் பூஸ்டர்கள் விரைவில் வழங்கப்படாவிட்டால், மருந்துகளின் அளவு ஜூலை மாதத்திற்குள் காலாவதியாகிவிடும் என்றும் சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பரவும் நோய்த்தொற்றுகளின் விகிதம் கடந்த சில வாரங்களில் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பூஸ்டரைப் பெற்றவர்கள் இன்னும் அதைப் பெறாதவர்களை விட குறைவான அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதைப் பொருட்படுத்தாமல், ஜலதோஷம், தலைவலி, சோர்வு, தும்மல், தொண்டை வலி, தொடர் இருமல், கரகரப்பான குரல், சளி அல்லது நடுக்கம், காய்ச்சல், தலைசுற்றல், தசைவலி, வாசனை இழப்பு அல்லது மார்பு வலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக PCR பரிசோதனை செய்து, அதன் முடிவு வரும் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அறிகுறிகள் தீவிரமாக இல்லாவிட்டால், மக்கள் வீட்டு சிகிச்சையைப் பெறலாம் என்றும் ஆனால் அறிகுறிகள் மோசமாக இருந்தால், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள் கொரோனா நோயாளியுடன் தொடர்புகொண்டிருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்படவேண்டிய அவசியமில்லை என்றும் இருப்பினும் அறிகுறிகளைக் கவனிக்கவும் வீடுகளை விட்டுவெளியேறும்போது முகக்கவசங்களை அணியவும் அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேநேரம், இன்னும் பூஸ்டர் டோஸைப் பெறாதவர்கள் கொரோனா நோயாளியுடன் தொடர்பு கொண்டவர்களாயின் அவர்கள் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஃபைசர் தடுப்பூசிகள் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டத்தின் நிறைவில் முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: