கொரோனாவை கட்டுப்படுத்த வழங்கிது போன்று தற்போதைய நெருக்கடியின் போதும் பொருட்களை விநியோகிப்பதற்கு முப்படையினருக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குங்கள் – மக்களிடம் இராணுவத் தளபதி கோரிக்கை!

Friday, April 22nd, 2022

இலங்கையில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு முப்படையினருக்கு தேவையான ஆதரவை வழங்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்ற மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினால் எரிபொருள் விநியோகம் மற்றும் பொது மக்களின் போக்குவரத்துச் செயற்பாடுகளுக்கும் தடைகளை ஏற்படுத்தும் முயற்சிகள் சில தரப்புக்களால் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் காவல்துறை மா அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க போக்குவரத்துச் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இராணுவம் மற்றும் ஏனைய படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பொது மக்கள் சிலர் தாமாகவே முன்வந்து வீதித்தடைகளை அகற்றுவதாகவும், அதற்காக பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுநோய் பரவல் உக்கிரமடைந்திருந்த வேளையில் படையினருக்கும் காவல்துறையினருக்கும் வழங்கிய ஒத்துழைப்புக்களை போன்றே தற்போதைய நெருக்கடியின் போதும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: