கூட்டு பொறுப்பை மீறும் வகையில் செயற்படக்கூடாது – எதிர்வரும் நாட்களில் முக்கிய தீர்மானம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச தகவல்!

Wednesday, January 5th, 2022

ஒழுக்காற்று காரணிகளை கருத்திற்கொண்டே சுசில் பிரேம்ஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஒழுக்காற்று காரணிகளை கருத்திற்கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அரசை விமர்சித்துள்ள ஏனைய அமைச்சர்கள் குறித்தும் எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் முன்னெடுக்கப்படும். அமைச்சரவை உறுப்பினர்கள் மாத்திரமல்ல, ஆளுந்தரப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

கொரோனா தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசு பாரிய நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது. பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை ஏற்கின்றோம்.

எனவே, நாட்டு மக்களுக்கு நிவாரம் வழங்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் கட்டம் கட்டமாக செயற்படுத்தப்படும்.

முதற்கட்டமாக அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு, இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள்மீதான வரி நீக்கம் உள்ளிட்ட பல நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன. மக்கள் எதிர்ப்பார்த்த மாற்றம் விரைவில் நிறைவேறும்.

அதேவேளை, அரசு எடுக்கும் தீர்மானங்களில் குறைபாடுகள் காணப்படின், அதனை சுட்டிக்காட்டும் உரிமை ஆளுங்கட்சியினருக்கு இருக்கின்றது. அதற்கு பொருத்தமான இடங்களும் உள்ளன. அதைவிடுத்து கூட்டு பொறுப்பை மீறும் வகையில் செயற்படக்கூடாது.“ எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: