“’70 ஆண்டு நாணய வழங்கல் மற்றும் முகாமைத்துவப் பயணம்” – விசேட நூலை வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி !

Saturday, July 17th, 2021

இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற தொடர்பூட்டல் பணிப்பாளர் செல்வி செலோமி எச் குணவர்த்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற மூத்த முகாமையாளர் திரு. டபிள்யு எம் கே வீரகோன் ஆகியோர் இணைந்து எழுதிய “70 ஆண்டு நாணய வழங்கல் மற்றும் முகாமைத்துவப் பயணம்” எனும் தலைப்பில் இலங்கையில் பயன்படுத்தப்படும் நாணய வரலாறு பற்றிய விசேட நூலொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

வங்கியாளர்கள், மாணவர்கள், நாணயச் சேகரிப்பாளர்கள் மற்றும் இலங்கை நாணயத்துடன் தொடர்புடைய வரலாற்றில் ஆர்வம்கொண்டுள்ளவர்களுக்கான உசாவுகையொன்றாகப் பயன்படுத்தத்தக்க இவ்வெளியீட்டினைத் தொகுப்பதில் நூலாசிரியர்கள் இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களத்தில் பல வருடங்களைக் கொண்ட தமது அனுபவத்தினை பயன்படுத்தியுள்ளனர்.

இந்நூல், வரலாற்று ரீதியான விவரணத்துடன் கூடிய பண்டைக் காலத்திலிருந்து இலங்கையில் பயன்படுத்தப்படும் நாணயத் தாள்களின் மற்றும் குற்றிகளின் கவர்ச்சிகரமான வர்ண விளக்கப்படங்களையும் கொண்டமைந்துள்ளது, இவை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார பின்னணி பற்றிய கண்ணோட்டமொன்றினையும் வழங்குகின்றன.

இந்நூல் ஏழு அத்தியாயங்களைக் கொண்டது. இலங்கை மத்திய வங்கியின் உருவாக்கம் மற்றும் நாணய வழங்கல் அத்துடன் முகாமைத்துவத்தில் அதன் வகிபாகம் பற்றிய வரலாற்று ரீதியான விடயங்களை அத்தியாயம் ஒன்று எடுத்துரைக்கின்றது. அத்தியாயம் இரண்டு, இலங்கை மத்திய வங்கி தாபிக்கப்பட்ட காலப்பகுதியில் சுற்றோட்டத்திலிருந்த நாணயத் தாள்களையும் குற்றிகளையும் விபரிக்கின்றது. இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் நாணயக் குற்றிகளை அத்தியாயம் மூன்று ஆராய்வதுடன் மத்திய வங்கியினால் வழங்கப்படும்; நாணயத் தாள்கள் பற்றி அத்தியாயம் நான்கு ஆராய்கின்றது. அத்தியாயம் ஐந்து, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் ஞாபகார்த்த நாணயத் தாள்கள் மற்றும் குற்றிகளை உள்ளடக்குகின்றது. இது இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு வழங்கப்பட்ட குற்றித் தொடர்கள் மீதான விசேட பிரிவொன்றினையும் உள்ளடக்குகின்றது.

நாணயத் தாள்களின் பாதுகாப்பு அம்சங்கள், ஆறு அத்தியாயத்தில் கலந்துரையாடப்பட்டுள்ள அதேவேளை இலங்கையில் நாணயம் வழங்கப்பட்டு முகாமை செய்யப்படுகின்ற சட்ட ரீதியான கட்டமைப்பினை அத்தியாயம் ஏழு உள்ளடக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: