கூட்டமைப்பை தெரிவுசெய்து நிர்க்கதியாகிவிட்டோம் – கிளிநொச்சி மக்கள் ஆதங்கம்

Saturday, April 9th, 2016

ஆற்றலும் அக்கறையுமில்லாத மாகாண சபையைத் தெரிவு செய்ததின் விளைவையும் பாதிப்பையும் நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என கிளிநொச்சி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளிநொச்சியில் இன்றைய தினம் (09) மாவட்ட மக்கள் பிரதிநிதிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது யுத்தத்தால் பெரும் பாதிப்புக்களை நாம் சந்தித்திருந்த நிலையில் எமக்கான வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதி வாய்ப்புகளை நாம் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அதுமட்டுமன்றி கடந்த 30 வருடமாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி கண்டிருந்தது.

இந்த நிலையில் எமது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நாம் முன்கொண்டு செல்லும் நோக்கில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்தோம். ஏனெனில் அவர்கள் ஊடாகவே நாம் ஒரு முன்னேற்றகரமான மேம்பாடான வாழ்க்கையைப் பெற்றுக் கொள்வோம் என்ற பெரு விருப்புடன் அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்திருந்தோம்.

5

இதேபோன்றுதான் பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டமைப்பினருக்கு வாக்களித்திருந்தோம். இந்நிலையில் மாகாண சபையை வென்றெடுத்த கூட்டமைப்பினர் எமது எண்ணங்களை ஈடேற்றத் தவறியது மட்டுமன்றி எமது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் முன்கொண்டு செல்வதிலோ மேம்படுத்துவதிலோ இதுவரை எவ்வித கரிசனையும் செலுத்தவில்லை.

தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கைவிட்டு எம்மை நிர்க்கதியாக்கியுள்ளனர். இந்நிலையில் ஆற்றலும் அக்கறையுமில்லாத வடக்கு மாகாண சபையையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்ததன் விளைவையும் பாதிப்பையும் நாம் அனுபவித்து வருகின்றோம் என்றும் சுட்டிக்காட்டினர்.

6

இதனிடையே டக்ளஸ் தேவானந்தாவிடம் காணி உரிமம் இல்லாத காரணத்தினால் தாம் எதிர்நோக்கும் இடர்பாடுகளை எடுத்து விளக்கிய மக்கள் பிரதிநிதிகள் காணி உரிமத்தைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் கோரிக்கையினை முன்வைத்தனர்.

அத்துடன் வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம், குடிநீர், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, உள்ளக வீதிகளின் அபிவிருத்தி உள்ளிட்ட தமது அடிப்படைத் தேவைகள் தொடர்பாகவும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts: