கூடுகிறது அமைச்சரவை – இலங்கையின் எதிர்காலம் குறித்து இன்று தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பு!

Monday, December 13th, 2021

தற்போதைய வெளிநாட்டுக் கையிருப்பு நெருக்கடிக்குத் தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் நாட வேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவை இன்று தீர்மானம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கை கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொள்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு கடந்த சில மாதங்களாக எதிர்க் கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின்றி நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.

எவ்வாறாயினும், கடந்த நாட்களில் அரசாங்கத்திலுள்ள பல தரப்பினரும் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: