குவைத் தங்கியிருந்த வீட்டுப் பணியாளர்கள் 54 பேரை இலங்கை தூதரகம் மீண்டும் நாட்டிற்கு அனுப்பிவைப்பு!

Wednesday, August 16th, 2023

வீசா இன்றி சட்டவிரோதமாக குவைத் நாட்டில் தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 54 பேரை அந்நாட்டு இலங்கை தூதரகம் மீண்டும் நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

அதன்படி, குறித்த 54 பேரும் இன்று காலை 6.45 மணியளவில் குவைத் நாட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய கட்டணத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்கள் தங்கள் கிராமங்களுக்கு சென்றுள்ளனர்.

குறித்த குழுவில் 53 பெண் வீட்டுப் பணியாளர்களும் ஒரு ஆண் பணியாளரும் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மீதமுள்ளவர்கள் பொலன்னறுவை, மொனராகலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் தாம் ஒப்பந்தம் செய்த பணியிடங்களை விட்டு குவைத் நாட்டில் வேறு இடங்களில் அதிக ஊதியத்திற்கு நீண்ட நாட்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

பின்னர், சுகவீனம், இலங்கையில் வசிக்கும் அவர்களது குடும்பங்களில் எழும் பிரச்சனைகள், வயது வரம்பு மீறல் போன்ற காரணங்களால் இலங்கைக்கு திரும்ப எண்ணி குவைத் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: