குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதியின் நடவடிக்கை!

Thursday, March 5th, 2020

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரைவாசி விலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதி ஒன்றை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், சீனி, அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் தேயிலை போன்ற ஐந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படவுள்ளது.

இந்த நிவாரண பொதியின் சந்தை பெறுமதி 1000 ரூபாவுக்கும் அதிகம் என்ற போதிலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அந்த பொதி 500 ரூபாவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதில் 5 கிலோகிராம் அரிசி, ஒரு கிலோகிராம் சீனி, 500 கிராம் கோதுமை மாவு, ஒரு கிலோ பயறு மற்றும் 200 கிராம் தேயிலை தூள் இதில் உள்ளடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதொச மற்றும் கூட்டுறவு சங்கக் கடைகள் ஊடாக இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளன. அதற்காக இலத்திரனியல் அட்டை ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த அட்டையை பயன்படுத்தி மாதத்திற்கு ஒரு முறை இந்த நிவாரண பொதியை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த திட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட 33 லட்சம் குடும்பங்கள் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை செயற்படுவதற்காக 160 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக ஒரு லட்சம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த நிவாரண பொதிகள் வழங்கப்படவுள்ளன.

Related posts: