குறைந்த வட்டிவீதத்தில் முன்னாள் போராளிகளுக்கு கடன் உதவி!

Saturday, August 27th, 2016

முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்குவதற்கு  அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுயதொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இந்த கடன் வழங்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நாடாளுமன்ற மேற்பார்வை குழு இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளது.

இதன்பிரகாரம் புனர்வாழ்வின் பின்னர் சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்டப் போரின் போது சுமார் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்ததாக அரசாங்கம் கூறியிருந்தது.

குறித்த முன்னாள் போராளிகள், தொழிற்பயிற்சி உள்ளடங்கலாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு, சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே குறித்த போராளிகளது வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வங்கிகளூடாக குறைந்த வட்டியுடனான கடனுதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வருவதுடன் அவர்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களையும் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அரசாங்கத்திடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: