நாங்கள் மந்தைக் கூட்டங்களா?: வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வடக்கின்  முதலமைச்சரிடம் கேள்வி!

Thursday, March 23rd, 2017
நாங்கள்  மந்தைக் கூட்டங்களா? என வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்கினேஸ்வரனை நோக்கிக் கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நாங்கள் உங்களுக்கு மரியாதை தந்து உங்களைச் சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாக முறையிடுவதற்குக் காத்திருந்த போதும் அதனை அசட்டையீனம் செய்து வெளியேறிய உங்களை விடப் படிப்பிலும், பண்பிலும் நாம் சிறந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
வேலை வாய்ப்புக் கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் இன்று 25 ஆவது நாளாகவும் தீர்வின்றி இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளைச் சந்திக்காமல் அங்கிருந்து வெளியேறினார்.
இதனால், ஆத்திரமடைந்த பட்டதாரிகள் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பட்டதாரிகள் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் கடந்த-25 நாட்களாகப் பெரும் அவலங்களுக்கு மத்தியில் போராடி வருகிறோம். ஆனால், நீங்கள் ஏசியுள்ள காருக்குள் தூசு போய்விடக் கூடாது என்பதற்காக எம்மைப் பொருட்படுத்தாது செல்கிறீர்கள். நீங்கள் எங்கள் காசில தான் சுகபோகங்களை அனுபவிக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நாங்கள் படித்து முடித்து விட்டு சமூகத்தில் உயர் நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இங்கு நிற்கிறோம். இந்த சூழலில் எங்களைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் கீழ்த் தரமான அரசியல் தலைவர்கள் எங்களுக்குத் தேவையா?, எங்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத நீங்கள் மனுஷரே இல்லை எனவும் குற்றம் சாட்டினர்.

unnamed

Related posts: