குறுகிய அரசியல் நலன்களுக்காக உண்மையான தொழிற்சங்க தலைவர்கள் போராடுவது கிடையாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Thursday, December 16th, 2021

உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நமது நாடு சுதந்திரம் அடைந்து எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியுடன் 74 ஆண்டுகளாகின்றன. அந்த சுதந்திரத்தை நாம் சாதாரணமாக பெறவில்லை. அந்த சுதந்திரத்தை பெறுவதற்கு தொழிலாளர் இயக்கம் பெரும் தியாகங்களை செய்தது. அவர்களின் அர்ப்பணிப்பு இல்லாவிட்டால், நமது சுதந்திரம் தாமதமாகியிருக்கும்.

அன்றுமுதல் நமது நாட்டின் தொழிலாளர் தலைவர்கள் இந்நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். அது மாத்திரமன்றி தொழிற்சங்க இயக்கங்களைக் கட்டியெழுப்பி, நாடு எதிர்நோக்கும் சவால்களை ஒவ்வொன்றாக முறியடிப்பதே அவர்களது எதிர்பார்ப்பாக காணப்பட்டது.

அத்துடன் தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை. மேலும், உழைக்கும் மக்கள் இனம், மதம், சாதி அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. அனைவரும் ஒரே வர்க்கத்தினர் என்ற அடிப்படையிலேயே பணியாற்றினர். நமது நாட்டில் தொழிற்சங்க இயக்கம் இன்றும் இவ்வாறு வலுப்பெற்று வருவது அன்று போடப்பட்ட அடித்தளத்தின் காரணமாகவே என்று நான் நம்புகிறேன்.

தொழிற்சங்க போராட்டம் என்பது குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து செய்யக்கூடியதொன்றல்ல. அடிவாங்குவதற்கும் நேரிடும். சிறையில் அடைப்படவும் நேரிடும். இன்று இங்குள்ள தொழிலாளர் தலைவர்களுக்கு அது குறித்து புதிதாக கூற வேண்டிய அவசியமில்லை.

அதேவேளை உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல. வேலையிழந்து சிறை சென்றாலும் எத்தனை இன்னல்கள் வந்தாலும் சகித்துக் கொண்டு போராடுகிறார்கள். இன்று இங்குள்ள தொழிலாளர் தலைவர்கள் உழைக்கும் மக்களுக்கு தங்களால் இயன்றவரை நேர்மையாக சேவையாற்றியிருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இன்று உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் பல உரிமைகள் மற்றும் சலுகைகள் இந்த தலைவர்களின் அர்ப்பணிப்பிலிருந்து பெறப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகள் என்று புதிதாக கூற வேண்டியதில்லை.

நான் தொழில் அமைச்சராக இருந்தபோது, இந்த தொழிலாளர் தலைவர்களில் பலர் என்னுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். நீண்ட நாட்களாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள். எனவே, இவர்களின் துயரமும் வேதனையும் நமக்கு புரியும். இதன் விளைவாக, அந்த தோழர்களின் நலனை மேம்படுத்தவும், அவர்களை திருப்திகரமான தொழிலாளர் சக்தியாக உருவாக்கவும் ‘சிரம வாசனா நிதியத்தை நிறுவ முடிந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: