குருந்தி விகாரைக்குரிய அரச காணி வெளித்தரப்பினருக்கு வழங்கப்படமாட்டாது ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் ஆய்வாளருக்கு விளக்கம்!

Friday, June 16th, 2023

முல்லைத்தீவு – குருந்தூர்மலை, குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணியை, வெளித்தரப்பினருக்கு வழங்க தீர்மானிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் ஆய்வாளர் எல்லாவல மேதாநந்த தேரருக்கு விளக்கமளித்துள்ளது.

குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணிகள் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், ஜனாதிபதி வெளியிட்ட தகவலின் அடிப்படையில், தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வினவியுள்ளார்.

குருந்தி விகாரைக்குச் சொந்தமில்லாத காணியை பொதுமக்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விகாரையைச் சுற்றிலும் பல இடங்களில் பல்வேறு பௌத்த விகாரைகளின் இடிபாடுகள் உள்ளதாகவும் எல்லாவல மேதானந்த தேரர் குறித்த கடிதத்தில் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, அரச காணியைப் பகிர்ந்தளித்தால், தவறான முறையில் காணி கைப்பற்றப்பட்டுள்ளதாக, குறிப்பிட முடியும் என்பதால், இந்தக் காணிகளைப் பகிர்ந்தளிக்காதிருக்குமாறும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம் தொடர்பில், ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நேற்றைய தினம், எல்லாவல மேதானந்த தேரருக்கு விளக்கமளித்து பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், குருந்தி விகாரை இலங்கையர்களின் முக்கியமான தொல்பொருள் தளம் எனவும், குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணிகளை ஏனையோருக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் நிலவும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வாக, 1985 ஆம் ஆண்டின்போது, காடு மற்றும் வனவிலங்கு வலயங்களாக இருந்த காணிகள், அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலையில், பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, தமிழ் மக்களால் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில், முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு விசாரணையும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: