குண்டு வெடிப்பு சம்பவங்கள் – 21 பேர் கைது!

Monday, April 22nd, 2019

நாட்டில் இடம்பெற்ற வெடிப்புக்களுக்கு காரணமான சிலர் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பப்படும் வீடு ஒன்று பாணந்துறை – சரிக்காமுல்ல பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த வீட்டிலேயே, வெடிப்பு சம்பவங்களுக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், குறித்த வீடு தொடர்பில் விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்ற நிலையில், இன்றைய தினம் காலை, பாணந்துரை நீதவான் அங்கு செல்லவுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெடிப்பு சம்பவங்களை அடுத்து இதுவரையில் சந்தேகத்தின் பேரில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் 7 பேர் முன்னதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, வெடிப்புக்களுக்காக பயன்படுத்தப்பட்ட வெடி குண்டுகளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும், சிற்றூர்ந்து ஒன்று நேற்று மாலை வெள்ளவத்தை – இராமகிருஷ்ணா வீதியில் வைத்து சுற்றி வளைக்கப்பட்டது.

இதன்போது குறித்த சிற்றூர்ந்தை செலுத்தி சென்ற சாரதியும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், சிற்றூர்ந்து குறித்து சந்தேகநபர் குறித்தும் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தெமட்டகொடவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை அடுத்து, 13 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுள் 10 பேர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அதியகட்சருமான ருவான் குண சேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விமானநிலைய நுழைவு வீதியில் நேற்று இரவு வெடிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த வெடிப்பொருள் விமானப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது.

பீ.வி.சி குழாய் ஒன்றில் குறித்த வெடிப்பொருள் பொருத்தப்பட்டிருந்ததாக, விமானப்படையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: