குடிநீர் சேவையை சீராக்க பவுசர், புனரமைப்பு பணிக்கு JCB இயந்திரம், அபிவிருத்திக்கு விஷேட நிதி – பிரதமரிடம் வேலணை பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை!

Thursday, June 7th, 2018

வேலணை பிரதேச மக்களின் குடிநீர் தேவைக்கான  சேவையை சீராக வழங்குவதற்கு 10 சக்கரங்களை உடைய குடிநீர்  பவுசர் ஒன்றும், பிரதேசத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் முகமாக JCB இயந்திரம் ஒன்றும் பிரதேசத்தின் அபிவிருத்தி தேவைகளுக்காக விஷேட நிதி ஒதுக்கீடும் பெற்றுத்தருமாறு கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சபையின் தேவைகள் தொடர்பில் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி மகஜர் ஒன்றை வழங்கியிருந்தார். குறித்த மகஜரிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –

சபை சோலைவரிகள் அறவிடாத நிலையில் அதனை அறவிடப்படுவதற்கான முன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் வேலணைப் பிரதேச சபையின் வரி அறவீடுகள் உள்ளடங்கலாக கிடைக்கும் ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபையினைக் கொண்டு நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு மேலதிக நிதி ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும்.

அத்துடன் மக்கள் குடிதண்ணீரினை பெற்றுக் கொள்வதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஏற்கனவே எமது பிரதேச சபையில் ஒரே ஒரு தண்ணீர் பவுசர் மட்டும் இருந்தது. அதன் மூலமே தீவகப் பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கி வருகின்றோம். இந்நிலையில் பவுசரும் அடிக்கடி பழுதாகி வருகின்றது. இதனால் குடிதண்ணீரினை ஒழுங்கான முறையில் மக்களுக்கு வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

எனவே வேலணை பிரதேச சபையால் சீரான முறையில் மக்களுக்கான சேவையை வழங்க  குறித்த கோரிக்கைகளை காலக்கிரமத்தில் பெற்றுத்தருமாறு  பிரதமரிடம் வேலணை பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

34369122_1787724347933311_3501692875152818176_n

Related posts: