கிளிநொச்சி கால்நடை வளர்ப்போருக்கு மேய்ச்சல்தரைக்கு ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் தவநாதனின் உறுதிமொழி நிறைவேற்றம்!
Wednesday, December 30th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போரின் மேய்ச்சல்தரைப் பிரச்சினைக்கு மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாயக்குழுக் கூட்டத்தில் இன்றையதினம் தீர்வுகாணப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் நேற்றையதினம் ஸ்கந்தபுரம் பகுதியில் கால்நடை வளர்ப்போரைச் சந்தித்து வழங்கிய உறுதிமொழிக்கமைய இன்றைய கூட்டத்தில் அவர்களுடைய மேய்ச்சல்தரைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டது.
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலக பிரிவில், அக்கராயன், ஸ்கந்தபுரம், ஊற்றுப்புலம், கோணாவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் மேய்ச்சல் தரவை இன்மையால் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வாக, தற்காலிகமாக 2ம் கட்டை முதல் ஆனைவிழுந்தான் மற்றும் கொக்காவில் வரையான பகுதியை மேய்ச்சல் தரவையாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதில் வன இலாகாவின்கீழ் வரும் பகுதிகளையும் மேய்ச்சல் தரவையாக தற்காலிகமாகப் பயன்படுத்தி கால்நடைகள் பட்டினியால் சாவடையாமல் தடுப்பதற்கு மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் அனுமதி வழங்கினார்.
இது ஒரு தற்காலிகமான ஏற்பாடே எனவும், நீண்டகால அடிப்படையில் விரைவில் புதிய மேய்ச்சல்தரைகள் கால்நடைகள் மேய்வதற்காக இனங்காணப்பட்டு வர்த்தமானி அறிவிப்புச் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாவட்டச் செயலாளர் இன்றைய கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக, கால்நடைகளுக்கான தீவனமாக புல்லு வளர்க்கும் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும், நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இதையும் ஒரு வருமானம் தரும் தொழில்துறையாக முன்னெடுக்க முடியும் எனவும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டது.
குறிப்பாக, பட்டி மாடுகளை பெரும் எண்ணிக்கையில் வளர்க்கும் கால்நடை வளர்ப்போர் தாமே முன்வந்து காணிகளைப் பெற்று தமது கால்நடைகளுக்கான தீவனமாக புல் வளர்ப்பில் ஈடுபடவேண்டும் என்றும் இதன்போது கால்நடை வளர்ப்போருக்கு வலியுறுத்தப்பட்டது.
இதன்மூலம், இனிவரும் காலங்களில் கால்நடைத் தீவனப் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக் காண முடியும் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீர்ப்பாசன திணைக்களம், கமநல திணைக்களம், பிரதி மாகாண விவசாய திணைக்களம்(விரிவாக்கல், ஆராய்ச்சி), விதைகள் மற்றும் நடுகைப்பொருள், விதை சான்றுப்படுத்தலுக்கான விவசாயத் திணைக்களப் பிரிவுகள், மாவட்ட விவசாய அலுலகம், விவசாய காப்புறுதிச் சபை, மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம், கால்நடை உற்பத்தித் திணைக்களம், கரும்பு ஆராய்ச்சி சபை ஆகியவற்றின் பொறுப்பதிகாரிகளும், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


