கிராமிய அமைப்புக்களின் பொதுப் பணிக்கான சுயாதீன செயற்பாடுகளில் அரசியல் தலையிடு தவிர்த்து கொள்ளவேண்டும் – கிராம மட்ட அதிகாரிகள் மத்தியில் இணைப்பாளர் வலியுறுத்து!

Monday, August 14th, 2023

கிராமிய அமைப்புக்களின் பொதுப் பணிக்கான சுயாதீன செயற்பாடுகளில் அரசியல் தலையிடு  தவிர்த்து கொள்ளவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் கிராமிய புத்தெழுச்சி குழுக் கூட்டங்களுக்கான கிராம மட்ட உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..

கட்சி முறை அரசியலின் போட்டிக்குள் கிராமத்தின் பொதுஅமைப்புக்களும் சிக்கிக் கொள்வதால் அவற்றின் சமுக பணி நன்மைகளை மக்கள் அடைந்து கொள்வதில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுத்து உரையாற்றிய இணைப்பாளர் மேலும் தனது உரையில் –

ஒரு சமுகமட்ட பொது அமைப்பின் நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும் போது குறித்த பொது அமைப்பை சார்ந்து அதில் அங்கம் வகிக்கும் மக்களும் தம்மை ஆதரிப்பர் என ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தமக்குள் எதிர்பார்க்கின்றன.

ஆனால் இதற்காக தமக்கிடையே கட்சிகள் ஏற்படுத்தி கொள்ளும் முரண்பாடுகளால் அனைத்து கட்சிகளையும் நிராகரித்துவிடும் நிலைக்கு மக்கள் சென்றுவிடுவதை இக்கட்சிகள் கண்டு கொள்ள தவறிவிடுகின்றன.

இதன் மறுவிளைவாக கிராமத்து மக்களை கூறுபடுத்தி அவர்கள் மத்தியில் தேவையற்ற மோதல்களை  உருவாக்கி விடும் நிலைக்கு அரசியல் கட்சிகள்  தள்ளப் பட்டிருப்பது தமிழ் மக்களை பொறுத்தவரை  ஒரு துர்ப்பாக்கியமான நிலமையாகும்.

இந்த நிலமைகள் களைந்தெறியப்பட வேண்டும். புத்தெழுச்சி  குழு கூட்டங்கள் கிராமங்களில் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் கூட்டு தலைமைத்துவமாக அடையாளப் படுத்தப்பட்டிருப்பதுடன் அங்கு வாழும் மக்களை அவர்களின் வாழ்வாதாரத்துக்காக அவர்களை சொந்தக் காலில் நிற்க செய்தல் என்பதையும் தமது குறியாக கொண்டிருக்கின்றன.

இதனை குறித்த அரசியல் கட்சிகளின் கிராம மட்ட அமைப்பாளர்கள் மேலான கவனத்தில் எடுத்து அங்குள்ள மக்களின் நலனை முன் நிறுத்தி தமக்குள் மோதலை தவிர்த்து ஒற்றுமையுடன் பணியாற்றும் பண்பை  முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கிராமிய மக்களின் மேம்பாட்டை கவனத்தில்  எடுத்து கட்சிகள் ஒற்றுமையுடன் பொதுப் பணிகளில் கவனம் செலுத்தும் போதே தமக்கான பொருத்தமான அரசியல் தலைமைத்துவத்தை அந்த மக்களே வகைதெரிந்து கொண்டு அதனை தமக்கான அரசியல் தலைமைத்துவமாக ஏற்றுக் கொள்ளும் சூழலை எதிர் காலத்தில்  உருவாக்க முடியும்.

இதனை  தமிழ் சூழலில் செயற்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: