காரைநகர் கடலில் மூழ்கி காணாமல்போன தமிழக மீனவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் காரைநகர் கோவளம் கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தையடுத்து, கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த தமிழக மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். காரைநகர் கடற்பகுதியிலிருந்து இன்று (20) காலை குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
உயிரிழந்த நபர் தமிழகத்தின், கோட்டைபட்டினம் பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரண் என்ற மீனவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் – கோவிலம் கடற்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இந்திய மீனவர்கள் சிலர் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவதானித்திருந்த நிலையில், இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகை சுற்றிவளைக்க முயன்றுள்ளனர்.
அதன்போது, கடற்படையினரின் கண்காணிப்புப் படகு மோதியதில் மீனவர்களின் விசைப் படகு கடலில் மூழ்கியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் படகிலிருந்த மூன்று மீனவர்களும் கடலில் மூழ்கியிருந்த நிலையில் அவர்களில் இருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டதுடன், மற்றைய நபர் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், நீரில் மூழ்கி காணாமல்போன மீனவரை கண்டுபிடிக்க கடற்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில், இன்று (20) காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|