காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களுக்கு யாழ். போதனாவில் இலகு குருதிச் சோதனை !

Thursday, January 10th, 2019

காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் டெங்குக் குருதிச் சோதனையை தனியார் ஆய்வுகூடங்களில் மேற்கொள்வதை விடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ள முடியும் என்று தேசிய டெங்கு தடுப்புப் பிரிவின் தலைவர் வைத்தியர் கசித திசேரா தெரிவித்தார்.

டெங்குத் தொற்றுக்குள்ளான பெரும்பாலானவர்கள் தனியார் மருத்துவ ஆய்வு கூடங்களிலேயே குருதிப் பரிசோதனை செய்கின்றனர். பரிசோதனைகளின் அறிக்கை பல சந்தர்ப்பங்களில் மறுநாளே நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.

அதனால் நோயின் தாக்கம் அதிகமாகும் நிலமை காணப்படுகின்றது. டெங்குத் தொற்றுக்குள்ளானவர்களுக்கு மேற்கொள்ளப்படும் குருதிப் பரிசோதனை அறிக்கை சோதனை செய்யப்பட்டு இரண்டு மணித்தியாலத்தில் வழங்கப்பட வேண்டும்.

குருதி சோதனை அறிக்கையை வைத்து நோயின் தாக்கத்துக்கு ஏற்ப உடனடி சிகிச்சை வழங்கப்பட வேண்டும். தனியார் ஆய்வு கூடங்களில் தாமதமாக அறிக்கை வழங்கப்படுவதால் நோயாளிகளின் நோய் அதிகரிக்கப்படுகின்றது. அரச வைத்தியசாலைகளில் குருதி பரிசோதனைகளை பெற முடியும். அங்கு இரண்டு மணி நேரத்திலேயே அறிக்கை கொடுக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

டெங்கு நோய் என்பது உயிர் கொல்லி நோய். பொதுமக்கள் உங்கள் சுற்றாடல்களை சுத்தமாக பேணி நோய்த் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பைப் பெற வேண்டும். இனிவரும் இரண்டு மாதங்கள் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உள்ளது.

Related posts: