காணாமல் போனோர் தொடர்பில் மரண சான்றிதழ் பெறும் திகதி  நீடிப்பு!

Monday, November 6th, 2017

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் உட்பட பல்வேறு சம்பவங்களின் போது, காணாமல் போனவர்களின் இறப்புகளை பதிவு செய்து, மரண சான்றிதழை பெறுவதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் மேலும் இரு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டம் ஏற்கனவே இரு தடவைகள் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது தடவையாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறித்தலை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன வெளியிட்டிருக்கின்றார். 2010ம் ஆண்டு 19ம் இலக்க இறப்புகளை பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் ஏதிர்வரும் டிசம்பர் 09ம் திகதி முதல் 2019 டிசம்பர் 09ம் திகதி வரை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக கருதப்படும் நபரின் மரணத்தை பதிவு செய்து மரண சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வகையிலான அந்த சட்டம் 2010ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது . சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து 3 வருடங்கள் என காலஎல்லை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவை கருதி இரு வருடங்களுக்கொரு தடவை நீடிக்க முடியும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: