கழிவுகள் இறக்குமதியை தடுக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Monday, July 29th, 2019

வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படும் கழிவுகளின் இறக்குமதியை தடுக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து சுமார் 5 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான கழிவுகள் 241 கொள்கலன்களில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த கழிவுகளின் இறக்குமதியை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாத அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல் தொடர்பான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதாரணகே தெரிவித்துள்ளார்.

தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் இது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, குறித்த கொள்கலன் வைக்கப்பட்ட இடத்திலிருந்து கிருமிகள் பரவாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான திட்டத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளதாகவும் விதாரணகே மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் களஞ்சியசாலையில் உள்ள கழிவுகளை ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் விரைவாக அப்புறப்படுத்துமாறு இலங்கை முதலீட்டுச் சபை ஹெய்லீஸ் பிறிஸ்சோன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

Related posts: