கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

Tuesday, June 25th, 2019

பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்வரும் 08ம் திகதி கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதுதவிர எதிர்வரும் 01ம் திகதி 09.30 மணிக்கு ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பாக நேற்று(24) விசாரணை செய்யப்பட்ட போது, கல்வி அமைச்சின் முன்னாள் கல்வி பிரசுரங்கள் ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி. இலங்கசிங்க சாட்சியம் வழங்கினார்.

இதன்போது, பாடப்புத்தகங்கள் அச்சிடும் போது, தனது உருவப்படம் மற்றும் தனது அறிக்கையை பதிக்குமாறு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தன்னை தனிப்பட்ட வகையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதாக ஐ.எம்.கே.பி. இலங்கசிங்க சாட்சியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அச்சிடுவதற்கு 4 ரூபா மேலதிக செலவினம் ஏற்பட்டதாகவும், கடந்த சில வருடங்களில் சுமார் 04 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டமையும் தெரிய வந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.

Related posts: