கல்வித்துறை தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!

Friday, April 12th, 2019

நாட்டின் கல்வித்துறை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்பினை அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்காது அதனை கல்வித்துறை சார்ந்த புத்திஜீவிகளும் கல்விமான்களும் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிள்ளைகள் எதிர்கால உலகினை வெற்றிகொள்ளத்தக்க வகையிலும் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலுமான தேசிய திட்டமொன்றினை விரைவில் நாட்டில் அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றினை அரசியல்வாதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோரின் பங்குபற்றலில் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று பிள்ளைகளின் கல்வியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாடசாலைகள் இலக்குடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படுத்தப்பட்டுள்ள போட்டித்தன்மை எமது நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு சிறந்ததல்ல.

இந்தமுறைமை பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி விரைவில் மாற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

பிரபல பாடசாலைகள் மற்றும் சிறந்த பாடசாலைகள் போன்ற எண்ணக்கருக்களால் இன்று எமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளில் பாரியளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

முறையான கல்வித்திட்டத்தின் ஊடாக சகல பாடசாலைகளையும் சிறந்த பாடசாலைகளாக மாற்றி அனைத்து பிள்ளைகளுக்கும் சம கல்வி உரிமையை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts: