கலப்பு எரிபொருளில் இயங்கும் 750 பேருந்துகள் இறக்குமதி – போக்குவரத்து அமைச்சர்!

கலப்பு எரிபொருள் மூலமாக இயங்கக்கூடிய 750 பேருந்துகளையும் மின்சாரத்தில் இயங்கும் 250 பேருந்துகளையும் ஹங்கேரியாவிலிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.
அவற்றிலிருந்து ஒவ்வொரு பேருந்துச்சாலைக்கும் 10 பேருந்துகளையாவது வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்தப் பேருந்துகளுக்கான பணத்தை இலங்கைப் போக்குவரத்துச் சபை 10 வருடங்களில் ஹங்கேரியாவுக்குச் செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் இவை இறக்குமதியாகின்றன. மின்சார பேருந்துகளை மீள் மின்னேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் நாட்டின் பல பகுதிகளிலும் செய்து கொடுக்கப்படும். இந்தியாவிடமிருந்தும் கடன் அடிப்படையில் 500 பேருந்துகளை சுமார் 20 மில்லியன் ரூபா செலவில் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 500 பேருந்துகளில் 56 ஆசனங்களைக் கொண்டவையாக 400 பேருந்துகளும் 35 ஆசனங்களைக் கொண்டவையாக 100 பேருந்துகளும் காணப்படும் என்று மேலும் தெரிவித்தார். இதுவரை இந்தியாவின் டாட்டா மற்றும் லேலன்ட் பேருந்துகளையே இலங்கைப் போக்குவரத்துச் சபை இறக்குமதி செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|