கறுப்புச்சட்டை போட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்காக பெற்றுக்கொடுத்தது என்ன? – ஈ.பி.டி.பியின் தேசிய எழுச்சி மாநாட்டு முன்னமர்வில் விந்தன்

Tuesday, April 19th, 2016

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்துவரும் கறுப்புச்சட்டை அணிந்த சட்டத்தரணிகளை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடுகின்ற  ஒரு அரசியல் கைதியையேனும் விடுவித்த வரலாறு இருக்கிறதா? அல்லது தமிழ் மக்களது வாழ்வியலுடன் தொடர்புடைய ஏதேனும் ஒன்றை மக்களுக்கு பெற்றுக்கொடுத்த பதிவுகள் தான் உள்ளனவா? தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சுமைகளையும் சுமந்து மக்களின் விடிவுக்காய் உழைத்துவரும் உங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம்தான்  தமிழ் மக்களது உரிமைகள் அடங்கிய வரலாற்றை எழுதும் எழுதுகோல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த எழுது கோல் உங்கள் வாழ்வில் வசந்தங்களை அள்ளித்தரும் என்றும் அதை பலப்படுத்தவே  இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 7ஆம் 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் முன்னமர்வு மாநாடு வேலணை கட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது முழுமையான உரையை எமது  EPDPNEWS.COM  இணையத்தள வாசகர்களுக்காக முழுமையாக பதிவிடுகின்றோம்.

டந்த காலங்களில் பல தடவைகள் எமது கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டை நடத்துவதற்கு நாம் முயற்சி எடுத்திருந்தோம். ஆனால்; நடத்துகின்ற மாநாடு ஒரு அர்த்தபூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு தாமதங்களுக்கு மத்தியிலும் இம்முறை இவ்வருடம் மேமாதம் 7ஆம் 8ஆம் திகதிகளில் எமது கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டை நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளோம்.

அந்த வகையில், மாநாட்டின் முன்னமர்வாக எமது தேசிய எழுச்சி மாநாட்டிற்கு தீவகப் பகுதி சார்ந்து மக்கள் எத்தகைய தீர்மானங்களைக் கொண்டு செல்லப் போகின்றீர்கள், அது அரசியல் ரீதியாகவோ, பொருளாதார, அபிவிருத்தி ரீதியாகவோ, இந்த மண்ணில் வாழ்வியல் உரிமைக்கான தீர்மானங்களாகவோ இருக்கலாம். அத்தனை தீர்மானங்களையும் நீங்கள் ஒன்றுகூடித் தீர்மானித்து, எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரிவிக்க முடியும்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று உங்கள் மத்தியில் உங்களுக்காக உழைத்து வருகின்ற கட்சி. இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடத்துடன் 30 வருடங்கள் பூர்த்தியாகின்றது. 1986ஆம் ஆண்டு உங்களுக்கான இந்தப் பெருவிருட்சத்திற்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களே. இதனடிப்படையில் 30 ஆண்டுகள் கழித்து இன்று நாம் தேசிய மாநாட்டை நடத்துவதற்காக ஒன்றுகூடியுள்ளோம்.

வடக்குக் கிழக்கில் எமது ஈழ தாயகத்தை நிறுவுவதற்கான இந்த மண்ணில் ஒரு ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தளபதியாக, அந்த இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராக, அரசியல்பீட உறுப்பினராக இருந்தவர்தான் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.

ஆரம்பகால எமது ஆயுதப் போராட்டம் உங்களுக்கு எதனையும் பெற்றுத் தரவில்லையென நீங்கள் நினைக்கலாம், ஆரம்பகாலத்திலிருந்த நாம் உட்பட அனைத்து இயக்கங்களும் போராடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13ஆவது திருத்தச் சட்டத்தை மட்டுமே பெற்றிருந்தோம். அன்று நாம் ஒற்றுமையாகப் போராடியிருந்தால், எமது ஈழ தேசத்தை அடைந்திருப்போம். ஆனால், அன்றும் எங்களுக்குள் பகைமைகள் குடிகொண்டு, ஒருதளத்தில் நின்று போராட வேண்டிய நாம் பிரிந்து சிதைந்து போனதுடன், சகோதரப் படுகொலைகளும் இடம்பெற்றது.

அன்றிலிருந்து, எமது மக்களுக்கான உரிமைப் போராட்டம் அழிவு யுத்தமாக மாறியபோதும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா தீர்க்கதரிசனமாக ஜனநாயக வழிமுறைக்கு நாம் செல்ல வேண்டுமென முடிவெடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை ஆரம்பித்தவர்.

வடமாகாண சபை என்பது நாம் போராடிப் பெற்ற ஒன்று. டட்லி – செல்வா      ஒப்பந்தம், பண்டா – செல்வா ஒப்பந்தம் ஆகியன எழுதி பேனா மையின் ஈரம் காய்வதற்கு முன்னர் கிழித்தெறியப்பட்டன. ஆனாலும் இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு காலம் கடந்து நீடித்திருக்கிறது என்றால், அது நாம் போராடியதற்கு கிடைத்த ஒன்றாகவே பார்க்கப்படவேண்டும்;.  அத்துடன், அயல்நாடான இந்திய அது வலுவிழக்காது போக பின்னணியாக இருந்திருக்கின்றது. அந்த ஒப்பந்தத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தியிருந்தால், இன்று நாங்கள் இந்த இடத்தில் நின்று தேசிய மாநாட்டிற்காகப் பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. நாம் அனைவரும் நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை அனுபவித்துக் கொண்டிருப்போம். அல்லது ஈழ பிரதேசத்தில் சுதந்திர பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருப்போம்.

நாங்கள் போராடிப் பெற்றுக்கொண்ட மாகாண சபையைக்கூட இன்று குரங்கின் கையில் பூமாலையைப் போல ஒப்படைத்துவிட்டோம். இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது நாங்கள் யாரிடமும் யாசகம் கேட்டுப் பெற்றுக் கொண்டதல்ல. அது போராடிப் பெற்றுக் கொண்ட உரிமை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட உரிமை எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும், அவருடன் இருந்த நாங்கள் உட்பட அன்று போராடிய அனைத்து இயக்கங்களுக்கும் உள்ளது.

ஆனால், அந்தப் போராட்டத்தை நாம் நடத்திச் சென்ற போது போராட்டத்திற்காக ஒருதுளி வியர்வைகூடச் சிந்தாமல், கட்டிய வேட்டிகூடக் கசங்காமல், போராட்டம் நடைபெற்ற போது ஒரு ஓரத்தில் நின்று கையைத் தட்டியேனும் ஆதரவு வழங்காத இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, இந்தத் தமிழரசுச் கட்சியினருக்கு எந்தவொரு பங்குமில்லை என்பதை நான் இங்கு கூறி வைக்க விரும்புகிறேன்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வரை பயங்கரவாதிகள் என்றுகூறி முத்திரை குத்தி அவர்களை சிறையில் அடைப்பதற்கு எத்தனித்த, சிறையில் அடைத்த, எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை போன்ற தலைவர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு எழுதிய, மண்ணின் மகிமையே தெரியாத, போராட்ட வரலாறு தெரியாத, அன்று எங்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை அழைத்து வந்து, நாங்கள் இரத்தம் சிந்திப் போராடிப் பெற்றுக்கொண்ட இந்த மாகாண சபையில் அமர்த்தியிருக்கிறார்கள் என்றால், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்பதை எமது மக்களாகிய நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கடந்த காலங்களில் நாம் அரசாங்கத்துடன் இணைந்துதான் இந்த மண்ணில் மக்களுக்கான சேவைகளையாற்றியிருக்கின்றோம். சேவைகள் மட்டுமல்லாமல், ஒரு அரசியல் தீர்வுக்கான குரலை நாங்கள் ஓங்கி ஒலித்திருக்கின்றோம் அதற்காக நாம் போராடியிருக்கின்றோம். சிங்கள அரசோடு இணைந்து நாங்கள் செயலாற்றியவர்களென அன்று எங்களைச் சுட்டுவிரல் நீட்டியவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று அதே சிங்கள அரசின் பின்கதவைத் தட்டி, கூனிக்குறுகி நின்று பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருப்பதுடன், பிரதிக் குழுக்களின் தலைவர் பதவியையும் அதே சிங்கள அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளார்கள்.

இந்த நாடாளுமன்றத்தில் அவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகத்தான், எதிர்க்கட்சி என்ற ஒரு கோதாவில் அமர்ந்திருக்கிறார்களேயொழிய, அவர்கள் எதிர்க்கட்சியினர் அல்லர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் சிங்கள அரசோடு இணைந்திருந்து இந்த மக்களுக்காக எத்தனையோ பணிகளை  ஆற்றியிருக்கின்றோம், எங்களைக் குறைகூறும் இவர்கள் இன்று சிங்கள அரசோடு இணைந்திருந்து எதை உங்களுக்காக ஆற்றியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் நன்று அறிவீர்கள்.

நாம் சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்தது சிங்கள மக்களின் பிரதேசங்களை அல்ல. உங்களுடைய அதாவது, தமிழ் மக்களின் பாதங்கள் நடந்து திரிகின்ற உங்களது வரலாற்று வாழ்விடங்களையே. சிங்கள அரசோடு இணைந்து உங்களுடைய பிள்ளைகளுக்குத்தான் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தோம். இந்த மண் துக்கத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த போது, ஏ-9 பாதை பூட்டப்பட்டு, யாழ் குடாநாட்டு மக்கள் பட்டினிச் சாவில் எரிந்துகொண்டிருந்த போது சிங்கள அரசோடு இருந்த எமது தலைவர் கப்பல் மூலம் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியது தமிழ் மக்களுக்கேயொழிய, சிங்கள மக்களுக்கு அல்ல என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி நாங்கள் 1990ஆம் ஆண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் இந்த மண்ணில் கால் பதித்த நாள் முதல் இந்த மக்களுக்காக 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற அந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதைநோக்கி எங்களுடைய மக்கள் எங்களுடைய அரசியல் நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக வலியுறுத்திக் கூறியிருந்தது சிங்கள மக்களுக்காக அல்ல. எங்களுடைய தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகத்தான் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் என்ற வார்த்தையையே உள்ளெடுக்காது தமிழ் மொழிக்கு உலக அந்தஸ்தை வாங்கித் தந்த திருக்குறள் போன்றவர்தான் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள். தமிழ் என்ற வார்த்தையையே உச்சரிக்காமல் தமிழ் மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் உழைத்துக் கொண்டிருப்பவர். தமிழ் தமிழ் என்ற வார்த்தையை உச்சரித்து எமது கழுத்தறுத்துப் போனவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். அவர்களது செயற்பாட்டால், எங்கேயாவது ஒரு வீட்டில் அடுப்பு எரிந்திருக்கிறதா? உங்களுடைய வீடுகளில் ஒரு வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கிறதா? இன்று ஆட்சி மாறி எத்தனை மாதங்கள், வருடம் கடந்து போயிருக்கிறது. உங்களுடைய தலைவர் அன்று அத்திவாரமிட்ட கற்களில் எழும்பிய கட்டிடங்களுக்கு இன்று அவர்கள் நாடா வெட்டி போட்டோ பிடிக்கிறார்கள். எங்களுடைய அமைச்சர் என்று அந்த அமைச்சிலிருந்து நீங்கினாரோ அன்றிலிருந்து இன்று வரை எந்தவொரு அபிவிருத்தியும் இந்த மண்ணில் இடம்பெறவில்லை. யாருக்கும் வேலைவாய்ப்பு இல்லை. எமது நிலம் எமக்கே சொந்தம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுடைய 17,522 ஏக்கர் நிலங்களை மீட்டுத்தந்தவர் உங்களுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே.

எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவர், 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று அரசியல் பலத்தோடு இன்று நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் தமிழ் மக்களுக்காக ஒரு முத்திரை அளவு நிலத்தைக்கூட விடுத்திருக்கிறார்களா? இல்லை ஆட்சி மாற்றத்தின் பின்பு வலிகாமத்தில் 1000 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டன. மக்களெல்லாம் நல்லாட்சியின் பின்னால் இலங்கை விடுவிக்கப்படுகிறது என்று சென்று பார்த்தால், பத்திரங்களில் கையொப்பமிட்டிருப்பது கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அப்படியென்றால், கடந்த ஆட்சியில் எங்களுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வலியுறுத்தப்பட்டதன் பெயரால் விடுவிக்கப்பட்ட காணிகள்தான் அந்தக் காணிகள். இன்றுகூட அரசு தயாராகத்தான் இருக்கின்றது. ஆனால், நாங்கள் அன்று, ஒரு அமைச்சரோடு, மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களோடு இருந்து அரசியல் பலமின்றி, குறைந்த பட்ச அரசியல் பலத்தோடு சதித்ததில் ஒரு துளியைக்கூட இந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் சாதிக்கவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

தமிழ் இளைஞர்கள் எத்தனையோ பேர் இன்னமும் அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடுகின்றனர். இந்த நிலை ஏன் என உங்களுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்கும் அதேவேளை, எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் கேட்கிறது. இந்த நல்லாட்சி மலர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள். சட்டத்தரணிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒரு அரசியல் கைதியையேனும் விடுவித்த வரலாறு இருக்கிறதா? இல்லை. எங்களுடைய உறவுகளை உங்களால் ஏன் மீட்க முடியாதென அவர்கள் உங்களுடைய வீடுகளுக்கு வரும் போது கேளுங்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் இருந்து இன்று வரையும் நாம் சட்டத்தரணியும், மனித உரிமைவாதியுமான மகேஸ்வரி வேலாயுதத்தின் ஊடாக எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா சிறைக் கைதிகளாக இருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை விடுத்து திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணம், மட்டக்களப்புப் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைத்திருந்தவர். அதுமட்டுமன்றி, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 12,500 போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றால், அதற்குக் காரணமாக இருந்தவர், ஒரு அமைச்சராக இருந்து அழுத்தம் கொடுத்தவர் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.

எமது மக்களுக்காக எதனைச் செய்தீர்களென எம்மிடம் கேட்கும் கூட்டமைப்பிடம் நீங்கள் எதனைச் செய்தீர்களென இன்று நாங்கள் கேட்கிறோம். ஆகவே, நாங்கள் இங்கே கூறவந்திருப்பது யாதெனில், தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்கான இலக்கை அடைவதற்கான வரலாற்றுக் கடமை, இந்த மண்ணில் வாழ்வியல் உரிமைகளை நிறைவேற்றுவதற்கான கடமை, யுத்தத்தால் அழிந்து போயுள்ள எமது மண்ணை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்த வேண்டிய கடமை எல்லாம் எங்களது தலைமையான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீதும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீதும் வரலாற்றுக் கடமையாகச் சுமத்தப்பட்டுள்ளது.

அன்று பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன. அதாவது, சந்திரிக்கா அரசு கொண்டுவந்த வரலாற்றில் தமிழ் மக்களுக்குக் கிடைத்த மிகச்சிறந்த தீர்வுத்திட்டத்தை அன்று ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்த போது இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளும் சேர்ந்தே எதிர்த்தன. ஆகவே, இவர்களை நம்பிப் பயனில்லை. அங்கே பேரினவாதிகள் சேர்ந்து தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் தீர்வுக்கு எதிராக 02 லட்சம் பேராக ஊர்வலம் போனபோது இந்தத் தமிழ் கட்சிகளும் சேர்ந்தே போனார்கள்.

அந்தத் தீர்வு சாத்தியப்படுகிறதோ, இல்லையோ அந்தத் தீர்வுக்காகக் குரல் கொடுகு;க வேண்டிய தமிழ்த் தலைவர்கள், இன்று தமிழ்த் தேசியம் என்று முழங்குகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் வரலாற்றுத் துரோகம் இழைக்கிறார்கள். இன்றும் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதாகக் கூறி ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் பேசும் எமது மக்கள் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பசப்பு வார்த்தைகளை இனிமேலும் நம்பியிருக்கக் கூடாது. யாருடைய தலைமையில், யாருடைய தோள்களின் மீது இந்த மக்களுடைய விடுதலை, அபிவிருத்தி, வாழ்வியல் உரிமை, வேலைவாய்ப்பு போன்வற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான கடமைகள் சுமத்தப்படுகிறதோ, அந்தத் தலைமையை, அந்தக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான தேசிய மாநாடு இது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் யாழ். மாவட்ட குடிநீர்ப் பிரச்சினையை நாம் எழுப்பியிருந்த போது, நன்னீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு யாழ். குடாநாட்டில் எந்தப் பிரதேசத்தைத் தேர்ந்தெடுப்பதென அரசாங்க அதிபர் உட்பட, அமைச்சர்கள் எல்லாம் கேட்ட பொழுது உங்களுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தா தீவகத்தையே தேர்ந்தெடுத்திருந்தார். இதன்போது தீவகத்தைத் தேர்ந்தெடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முட்டுக்கட்டை போட்டனர். இவ்வாறானவர்களுக்கு எமது வடபகுதி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், அது யானை தன் தலையில் மண்ணை வாரி போடுவதற்கு ஒப்பானது என்பதை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தின் ஊடாக உலகத்திலேயே எத்தனையோ பாலைவன நாடுகளில் நடைபெறாத அதிசயத்தை இலங்கைத் தீவிலே முதன்முதலாக நெடுந்தீவில் நன்னீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார் உங்களுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குக் கிடைத்திருக்கின்ற 16 ஆசனங்கள் எமது கட்சிக்குக் கிடைத்திருந்தால், அல்லது கடந்த ஆட்சியில் 14 ஆசனங்கள் கிடைத்திருந்தால், அந்த நெடுந்தீவு நன்னீர்த் திட்டத்தைப் போல் இந்தத் தீவகத்தில் குறைந்த பட்ச அதிகாரத்துடன் செய்த அபிவிருத்தி வேலைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகளைப் போல் பல்வேறு அபிவிருத்திகளைச் செய்திருப்போம். இதேபோன்று, முள்ளிவாய்க்காலில் அன்று எமது மக்கள் கொல்லப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வைத்திருந்த 22 ஆசனங்களும் உங்களுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் வழியில் எங்களுடைய கட்சியில் இருந்திருந்தால் தமிழ் மக்களின் தலைவிதியை நாங்கள் அன்றே மாற்றியிருப்போம்.

அந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் வழங்க வேண்டும். அந்த மாற்றத்திற்கான ஒரு கட்சியாகத்தான் இந்தக் கட்சியை உருவாக்குவதற்காகவே இந்த தேசிய எழுச்சி மாநாட்டை நாம் நடத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்.

Related posts:

பண்டிகை காலத்தில் நாட்டில் புதிய சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பு – யாழ்ப்பாணத்தில் இராண...
வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைளை நீடிக்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவிப...
எனது கொள்கையை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்ப...