கர்ப்பிணிப் பெண் படுகொலை : கைதி உட்பட இருவர் வாக்குமூலம்!

Sunday, May 14th, 2017

 

ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ. சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அதன்போது வழக்கில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, குறித்த கொலை தொடர்பில் தகவல்கள் தெரியும் என கூறிய இரு நபர்களிடமும் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி நீதிமன்றில் திருட்டு குற்றம் தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி, தனக்கு ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் கொலை தொடர்பில் சில தகவல்கள் தெரியும் என நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அந்த நபரை ஊர்காவற்துறை நீதிமன்றில் சாட்சியம் அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கிளிநொச்சி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

அதேவேளை சிறைசாலையில் வைத்து, குறித்த இரு சந்தேகநபர்களிடமும் “எனக்கு இந்த சம்பவம் குறித்து சில தகவல்கள் தெரியும், அதனை நீதிமன்றில் தெரிவிக்க வேண்டுமாயின் எனக்கு 5 இலட்சம் ரூபாய் தர வேண்டும்” என ஒருவர் பேரம் பேசியதாக கூறப்பட்ட நபரிடமும் தாம் வாக்கு மூலங்களை பதிவு செய்து உள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சிறைசாலையில் இவ்வாறு சந்தேகநபர்களுடன் பேரம் பேசியதாக கூறப்படும் நபர் “நெடுந்தீவில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கல்லால் அடித்து படுகொலை செய்த குற்றத்திற்காக யாழ்.மேல் நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்” என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: