கட்டுமானத்துறை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – முன்மொழிவுகள் அடங்கிய விசேட அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் முன்வைக்க தீர்மானம்!

Monday, March 25th, 2024

கட்டுமானத்துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கான முன்மொழிவுகள் அடங்கிய விசேட அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிப்பதற்காக அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக செலுத்த முடியாத ஒழுங்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பற்றுச்சீட்டுகள் தொடர்பான கொடுப்பனவுகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் தற்போது பூர்த்தி செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அதன்படி கடந்த வருடம் செலுத்தப்பட்ட  பெறுமதி 12,501 மில்லியன் ரூபாவாகும்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்று காரணமாக, இலங்கையின் கட்டுமானத் துறை கடும் பின்னடைவைச் சந்தித்ததுடன், இதன் காரணமாக, கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியின் விசேட கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து, இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதியமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இதன்படி, இது தொடர்பான கொடுப்பனவு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அதற்கேற்ப நிலுவைத் தொகைகளை செலுத்துவதை நிறைவு செய்யும்.

கட்டுமான ஒப்பந்தங்களை புதுப்பிக்கும் போது விலை அதிகரிப்புக்குரிய கொடுப்பனவுகளை சில அரச நிறுவனங்கள் கொடுக்காமல் இருத்தல் மற்றும் கொடுப்பனவுகளைத் தாமதித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பிரேரணைகள் உத்தேச அமைச்சரவை பத்திரத்தில் உள்ளடக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: