கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் திரளுங்கள் – பொன்.சிவகுமாரனின் சகோதரர் பொன். சிவசுப்பிரமணியம்!
Tuesday, June 5th, 2018
தமிழர்களிடையே இருக்கின்ற கட்சி பேதங்கள்தான் தமிழ் மக்கள் குறைபாடுகளை சந்தித்து வருகின்றமைக்கான பிரதான காரணமாக இருக்கின்றது என பொன்.சிவகுமாரனின் சகோதரரான பொன். சிவசுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொன் சிவகுகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவுதினம் மற்றும் விடுதலை வித்துக்கள் தினமும் ஒருங்கே கடைப்பிடிக்கப்பட்ட இன்றைய தினத்தில் உரையபற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெதரிவிக்கையில் –
நான் இலண்டனில் வசித்துவந்தாலும் டக்ளஸ் தேவானந்தாவுடன் அடிக்கடி பேசிக்கொள்ளுவேன். அதுமாத்திரமன்றி கட்சியின் இலண்டன் கிளை ஊடாக பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளேன்.
அதுமாத்திரமன்றி இலங்கைக்கு வருகைதருகின்றபோதெல்லாம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடுவேன். உரும்பிராயைப் பொறுத்தவரையில் இங்கு சாதிப்பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக இருந்தபோதிலும் அதற்கான தீர்வுகாண்பதில் எனது சகோதரன் பொன் சிவகுமாரனுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.
அதனடிப்படையில்தான் சமபந்திப் போசனத்தையும் ஏற்பாடு செய்திருந்தோம். இக்காலகட்டங்களில் நாம் இப்பகுதி மக்களின் எதிர்ப்புகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்த அதேவேளை அவற்றை சமாளிப்பதிலும் பெரும்பாடுகளைக் கண்டுள்ளோம்.
இன்றுள்ள சூழலில் தமிழர்களுக்கான மிகமுக்கியமான பிரச்சினையாக கட்சி பேதங்களே இருக்கின்றன.
இதனால் தமிழ் மக்கள் பல குறைபாடுகளுடனும் நெருக்கடிகளுடனும் வாழ்ந்துவருகின்றனர். எனவே சக இயக்கங்களை சேர்ந்தவர்களையும் சேர்த்து எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கின்ற அதேவேளை அதற்கு நான் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்குவேன்.
ஆயுதப் போராட்டத்தையும் அகிம்சைப் போராட்டத்தையும் தமிழர்கள் முன்னெடுத்திருந்தபோதிலும் எதிலுமே நாம் உரிய வெற்றியை பெறமுடியவில்லை.
அதிலும் ஆயுதப் போராட்டம் தோற்றதினால் நாம் இப்போது எங்கே இருக்கின்றோம் என்ற கேள்வியுடன் நாம் வாழ்ந்துவருகின்றோம். தமிழரது அரசியலைப் பொறுத்தவரையில் எமக்குள் ஒற்றுமை இல்லாமை பாரிய குறைபாடாக இருக்கின்றது.
எனவே எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எமது பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வுகளைக் காணமுடியும். குறிப்பாக எனது சகோதரன் உயிர்நீத்த இந்நாளில் விடுதலை வித்துக்கள் தினத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் பிரகடனப்படுத்தியுள்ளமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் பொன். சிவசுப்பிரமணியம் சுட்டிக்காட்டினார்.

Related posts:
|
|
|


