கடுமையான சுகாதார விதிமுறைகளுடனேயே தேர்தல் நடைபெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, May 31st, 2020

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது, தேர்தல் சட்டங்களுடன் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்தல் ஆணைக்குழு பிரசாரம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான நெறிமுறைகளை வெளியிடும். இதில் கூட்ட கட்டுப்பாடுகள் அடங்கும் என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது நெறிமுறைகளை அமுல்படுத்துவது குறித்து பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

சமூக இடைவெளி மற்றும் கூட்ட வரம்புகள் உள்ளிட்ட இந்த நெறிமுறைகள் அடங்கிய ஆவணம் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும்.

தேர்தல் சட்டங்களின் கீழ் தேர்தல் பேரணிகளில் கூட்டத்திற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்றாலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிறப்பிக்கும் விதிமுறைகளின் கீழ் இந்த கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரணிகள் மற்றும் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தபால் வாக்குப்பதிவு, வாக்குச் சீட்டுகளை சேமித்தல், வாக்கு சாவடிகளைத் தயாரித்தல், வாக்குப் பெட்டிகளை அனுப்புதல், தேர்தல் அதிகாரிகளுக்கு தங்குமிடம் மற்றும் தேர்தல் நாளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் தேர்தல் ஆணைக்குழு நெறிமுறைகளை உருவாக்கி வருகிறது என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அடுத்த வாரம் நெறிமுறைகள் அடங்கிய ஆவணம் பகிரங்கப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரிய கொழும்பு ஆங்கில ஊடகத்திடம் கூறியுள்ளார்.

Related posts: