கடினமான சூழ்நிலையிலும் வீதி ஒப்பந்ததாரர்களுக்கு 36 ஆயிரத்து 690 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, March 22nd, 2023

நாடு இக்கட்டான சூழ்நிலையிலுள்ள போதும் வீதி நிர்மாண ஒப்பந்ததாரர்களுக்கு 36,690 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“வீதி அமைத்த ஒப்பந்ததாரர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு அரசாங்கம் பணம் வழங்காமல் இழுத்தடித்ததாக நாளிதழில் செய்தி வெளியானது.

திறைசேரியில் பணம் இல்லை. அதனால், வெளிநாட்டில் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை என அறிவித்தோம். பின்னர் திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இரண்டு நீண்ட கால பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.

2024/2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் உள்ளடங்கிய திறைசேரி பத்திரங்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மக நெகும நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த முறையில் பணம் செலுத்தப்பட்டுள்ளது”.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையானது 1186 ஒப்பந்தக்காரர்களுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான கொடுப்பனவுகளுக்காக திறைசேரி பத்திரங்களில் 19,752 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளது.

391 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.11,599 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. 50 மில்லியனுக்கும் அதிகமான கொடுப்பனவுகள் ஒப்பந்தக்காரர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் ரூ.2,823 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. மக நெகும மூலம் ரூ.1,763 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

““இது மிகவும் கடினமான பணி. கடன் வாங்கிய பின்னர் இந்த பணம் செலுத்தப்படுகிறது. சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து உண்டியல்களுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரும் அமைச்சிற்கு வர வேண்டாம், அவர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். காசோலைகளைப் பெறும்போது எந்த நபரும் எந்தத் தொகையையும் செலுத்தத் தேவையில்லை. இந்த பணம் முழு வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளது,” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: