கடமையை மீறும் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

Wednesday, September 21st, 2016

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தமது கடமையை மீறிச் செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு, தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களின் சிறைக்கூடங்களில் சீ.சீ.ரி.வி கமராக்களைப் பொருத்துவது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தினேஷ் குணவர்த்தன எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் சாகல ரத்னாயக்க இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: அரை மணித்தியாலங்களுக்கு ஒருதடவை சிறைக்கூடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதும், புசல்லாவ இளைஞர் உயிரிழந்த சமயம் ஒரு மணித்தியாலத்தின் பின்னரே பொலிஸார் சிறைக்கூடத்தை சோதனையிட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

புஸ்ஸல்லாவ வை.ஆர்.சி தோட்டத்தைச் சேர்ந்த 30 வயதான நடராஜா ரவிச்சந்திரன் அனுமதிப்பத்திரம் இன்றி 450 மில்லிலீட்டர் ‘மஹரா’ வைத்திருந்தமை தொடர்பில் எல்பொட நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 17ஆம் திகதி மாலை 4.40 மணிக்கு புஸ்ஸல்லாவ நகரில் கைதுசெய்யப்பட்டார். மாலை 5.15 மணிக்கு அவர் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார். மாலை 6.15 மணி மற்றும் 6.45 மணி ஆகிய நேரங்களில் இருவடைய சிறைக்கூடம் பரீட்சிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் இருக்கும் இடத்திலிருந்து 6.5 மீற்றர் தூரத்தில் சிறைக்கூடம் அமைந்திருந்தபோதும் பொலிஸார் இருக்குமிடத்திலிருந்து சிறைக்கூடம் நேரடியாகத் தென்படவில்லை. சிறைக்கூடங்கள் அரை மணி நேரங்களுக்கு ஒருதடவை பரீட்சிக்கப்படும். ஆனால் மாலை 6.45 மணிக்குப் பிறகு அரை மணித்தியாலத்துக்கான சோதனை நடைபெற்றிருக்கவில்லை. இரவு 7.40 மணியளவில் சிறைகூடத்திலிருந்து சத்தம் கேட்கவே பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த இடத்துக்கு விரைந்துள்ளார்.

அங்கு சென்றுபார்த்தபோது சிறைக் கம்பியில் தனது டீ சேர்ட்டை பயன்படுத்தி தூக்குப்போட்ட நிலையில் ரவிச்சந்திரன் காணப்பட்டுள்ளார். துடிதுடித்துக் கொண்டிருந்த அவரை காப்பாற்றி பொலிஸார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் கடந்த 18ஆம் திகதி கம்பளை நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்வரும் 23ஆம் திகதி மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.அன்றையதினம் சட்டமருத்துவ விசாரணை அறிக்கையை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை கடந்த 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

பகிரங்க தீர்ப்பு வழங்கப்பட்டதோடு உடற்பாகங்கள் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. 23ஆம் திகதி சம்பவம் தொடர்பான முழுமையான சாட்சியங்கள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படும்.

இரு பிரதிப் பொலிஸ்மா அதிபர்களின் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொலிஸார் தமது கடமையை தவறவிட்டு, ஒழுங்கை மீறிச் செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.சகலரதும் பாதுகாப்புக்கு பொலிஸார் பொறுப்புக்கூற வேண்டும். பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தேகநபர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

சகல சிறைக்கூடங்களிலும் சீ.சீ.ரி.வி கமராக்களைப் பொருத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.இதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். புஸ்ஸல்லாவையில் தற்பொழுது நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

sagala1_20092016_kaa_cmy

Related posts: