கடந்த வருட முதற்காலாண்டை விட இந்த வருடம் மழை குறைந்துள்ளது – வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி!

Wednesday, March 21st, 2018

கடந்த வருடம் முதற் காலாண்டில் பெய்த மழையின் அளவை விட இந்த வருடம் முதற் காலாண்டில் பெய்த மழையின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே கிடைக்கும் மழை நீரைச் சேமிக்க அனைவருமே முன்வர வேண்டும். இவ்வாறு யாழ்ப்பாணத்திலுள்ள வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 250 தொடக்கம் 300 மில்லிமீற்றர் மழை பெய்வது வழமை. ஆனால் கடந்த ஜனவரியில் 14.6 மில்லிமீற்றர், பெப்ரவரியில் 6.4 மில்லிமீற்றர், மார்ச் இதுவரை 48.6 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது. இந்த வருடம் நேற்றுவரையான சுமார் 3 மாதங்களில் 84.1 மில்லிமீற்றர் மழையே பெய்துள்ளது.

கடந்த வருடம் ஜனவரியில் மட்டும் 86.7 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது. பெப்ரவரியில் 25.6 மில்லிமீற்றர், மார்ச்சில் 119.6 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது. இந்த வருட மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் மழைவீழ்ச்சி மிகமிகக் குறைவாகவுள்ளது.

ஏப்ரலில் மழை வீழ்ச்சி பதிவாகவில்லை. மே 29.6 மில்லிமீற்;றர், ஜீன் 10.8 மில்லிமீற்றர், ஜீலை 12.7 மில்லிமீற்;றர், ஓகஸ்ட் 70 மில்லிமீற்றர், செப்டெம்பர் 91.3 மில்லிமீற்;றர், ஒக்டோபர் 184 மில்லிமீற்றர், நவம்பர் 611.7 மில்லிமீற்றர், டிசெம்பர் 100.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டிலும் முதற்காலாண்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளது. ஜனவரியில் 15.9 மில்லிமீற்;றர், பெப்ரவரியில் 6.4 மில்லிமீற்;றர், மார்ச்சில் 1.8 மில்லிமீற்;றர் பதிவாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டும் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 100 மில்லிமீற்றரைத் தாண்டியுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதற்காலாண்டில் மிக அதிகளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி ஜனவரியில் 151.8 மில்லிமீற்றர், பெப்ரவரியில் 151.5 மில்லிமீற்;றர், மார்ச் 117 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது. இவற்றுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் முதற்காலாண்டில் மழை வீழ்ச்சி குறைவாகவே கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றினால் பெரியளவில் மழை வீழ்ச்சி கிடைக்கவில்லை. கடந்த வருடங்களில் ஜனவரியில் சராசரியாக 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைத்து வந்தது. சில வருடங்களாக இது குறைவடைந்துள்ளது. எனவே மழை நீரைச் சேமிக்க வேண்டிய சேகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து எவரும் பின்வாங்கக்கூடாது. இலவசமாகக் கிடைத்தாலும் அதன் அருமையை உணர்ந்துகொள்வோர் குறைவு. ஆனால் இனி அனைவரும் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மழை நீரைச் சேகரிக்க ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

எனவேதான் மழை நீரைச் சேமிக்க அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் அனைவரும் ஆர்வம் கொள்ளவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: