கடந்த இரண்டு ஆண்டுகளை விட இவ்வாண்டு டெங்கு பாதிப்பு இரு மடங்கு அதிகம் – காய்ச்சலுக்கு பராசிட்டமோல் தவிர வேறு எந்த மருந்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, January 1st, 2023

நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களை விட இந்த வருடம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் 25,067 டெங்கு நோயாளர்கள் மாத்திரம் பதிவாகியுள்ள போதிலும், இந்த வருடம் ஜனவரி மாதம்முதல் நாடு முழுவதும் 76,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் நாட்டில் பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 31,162 மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக வலியுறுத்திய அவர் , நான்கு வாரங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு 200 முதல் 300 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு நோயாளர்களைக் குறைக்கும் நோக்கில் அமைச்சு நேற்றும் இன்றும் டெங்கு ஒழிப்பு தினங்களாகக் கடைப்பிடித்துள்ளது.

பாடசாலை புதிய தவணை ஜனவரி 2ஆம் திகதி தொடங்க உள்ளதால், நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள்,ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்படும். பாடசாலை வளாகத்தை நுளம்புகள் உற்பத்தியாகாத இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை உட்பட நாடு முழுவதும் 51 டெங்கு அபாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

ஒருவருக்கு 24 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், தகுதியான மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்றும், காய்ச்சலுக்கு பராசிட்டமோல் தவிர வேறு எந்த மருந்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: