ஒலிபெருக்கிப் பாவனையால் மாணவர்களின் கல்வி பாதிப்பு – நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றது தமிழர் ஆசிரியர் சங்கம்!

Saturday, December 9th, 2017

வடக்கில் ஒலிபெருக்கிகளின் மிகையான சத்தத்தால் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

அண்மித்த ஆண்டுகளில் எமது பிரதேசங்கள் கல்வியில் வீழ்ச்சி நிலையில் உள்ளன. அதற்கு அதிபர்களையும், ஆசிரியர்களையும் பலரும் குற்றம் சுமத்துகின்றனர். மாறாக பாடசாலை மாணவர்களின் பரீட்சைக் காலங்களில் ஆலயங்களில் மிகையான சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் அலறும் சத்தம் பலநூறு வீடுகளைத் தாண்டி அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன. இவை தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதாக இல்லை.

ஆலயங்களில் பக்தர்கள் எவரும் இல்லாத வேளைகளிலும் ஒலிபெருக்கிகள் தொடர்நதும் ஒலித்துக் கொண்டிருப்பதோடு, எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் இரவு பகல் என்று தொடர்ந்தும் ஒலிக்கின்றன. இதனால் கல்வி கற்கும் மாணவர்களும், பரீட்;சை எழுதும் மாணவர்களும், நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளர்களும் பெரிதும் அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர். இவை தொடர்பில் எம்மிடம் பலரும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்துக் கட்டுப்படுத்துமாறு மாவட்ட அரச அதிபர் உட்பட்ட அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம். என்றுள்ளது.

Related posts: