இலங்கைக்கு இயற்கையின் எச்சரிக்கை!

Saturday, April 15th, 2017

வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை சூறாவளியாக மாறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இலங்கைக்கு கிழக்கே இருந்து, பங்களதேஷ் அல்லது மியன்மாரை நோக்கி சூறாவளி நகர்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாகவும், இதனால் தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேஷ் ஆகிய பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலையை எதிர்பார்க்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சூறாவளிக்கு மொரா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதனால் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழையை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

கொழும்பு முதல் காலி வரையும், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையும் உள்ள கடற்பிராந்தியங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

கடும் காற்று வீசும் சந்தர்ப்பங்களில் கடற்பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான முன்னெச்சரிக்கை நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு கிழக்கேயுள்ள வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தாழமுக்க வலயத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக இந்த நிலைமை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Related posts: