ஒரே நாடு, ஒரே சட்டம் இவ்வருட இறுதிக்குள் உருவாக்கப்படும் – புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்கவும் நான் தயார் இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களை நோக்கி இந்நாட்டைக் கொண்டுசெல்வேன் என்று நான் உறுதியளித்திருந்தேன். எங்களிடம் எண்ணெய் வளம் இல்லை. எரிவாயு வளம் இல்லை. நிலக்கரி வளமும் எம்மிடம் இல்லை. நீர், சூரியசக்தி, காற்று ஆகியவைதான் எம்மிடம் உள்ளன என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இவற்றைக் கொண்டு நாம் எமது சக்தி வலுக்களை அதிகரித்துக்கொண்டு முன்னேற வேண்டும். அதற்கான வாக்குறுதிகளை நான் மக்களுக்கு வழங்கியிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்குமாறு எவராவது கூறினால், அது ஒரு நகைச்சுவையாகும். அதற்கு நான் தயார் இல்லை.

இந்த உலகம் அதனையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. நாம் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இன்று மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. விசேடமாக, தற்போது வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும்.

அதிகளவான மக்கள் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அதனூடாக அதிகளவு அந்நியச் செலாவணி எமக்குக் கிடைகின்றது.

அதற்காக நாம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். தற்போது வெளிநாட்டவர்கள் வருகைதர ஆரம்பித்துள்ளனர். நாம் எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, எதிர்வரும் வருடங்களில் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று அன்று நான் உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு ஒன்றை வழங்குவதற்கு, அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன். மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமையொன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் நான் ருவன்வெலிசாயவை வழிபடச் சென்றிருந்தேன். அங்கு படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது, இளம் வயது பிக்கு ஒருவரைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் கேட்டார், ‘ஜனாதிபதி அவர்களே, ஒரே நாடு, ஒரே சட்டத்தை உருவாக்குவதாகக் கூறினீர்களே. நாம் அதனை எதிர்பார்த்திருக்கிறோம்’ என்றார். நான் இவ்வருட இறுதிக்குள் அவ்வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: