அடுத்த வருடத்திற்கான இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Sunday, September 24th, 2023

2024 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு முன்னர், அடுத்த வருடத்திற்கான இலவச பாடப்புத்தகங்களை பாடசாலை மாணவர்களிடையே விநியோகிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பிரதான களஞ்சியசாலையில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள பிராந்திய மத்திய நிலையங்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் செயற்பாட்டை பார்வையிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே பாடசாலை சீருடை துணிகள் வழங்கப்படும் என பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீருடை துணிகள் மற்றும் மதிய உணவு ஆகிய இரண்டும் வழமை போன்று தாமதமின்றி வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்தார்.

இந்த அனைத்து பௌதீக வசதிகளையும் வழங்குவதன் ஊடாக, 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சரியான நேரத்தில் பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும், கொவிட் 19 தொற்று பரவலால் சீர்குலைந்த அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் மீட்டெடுப்பதற்கும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பாடசாலை இலவச பாடப்புத்தக அச்சிடும் பணியை, குறைந்த செலவில், உரிய நேரத்தில் செய்து நிறைவுசெய்துள்ளதாக 4,000 மில்லியன் ரூபாவை அரசாங்கத்தினால் சேமிக்க முடிந்துள்ளது எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: