உள்ளூராட்சி சபை உருவாக்கம் தொடர்பிலான ஆய்வுகள் மக்கள் பார்வைக்கு!

Friday, October 13th, 2017

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் புதிய உள்ளூராட்சி சபைகள் மற்றும் தரமுயர்த்தல் தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் விரைவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தலைமைச் செயலாளர் அ.பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

மாவட்டங்கள் தோறும் இயங்கிய ஆய்வுக்குழுக்கள் தற்போது தமது முடிவுகளை வடக்கு மாகாண தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கின்றன. இது தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு புதிய சபைகளை உருவாக்குவதற்கும் 6 சபைகளைத் தரமுயர்த்துவதற்குமாக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இவ்வாறு நியமிக்கப்பட்ட குழுக்களுக்கு அந்தந்த மாவட்டத்தின் செயலாளர்களே தலைவர்களாக நியமிக்கப்பட்டனர் மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரும், தலைமைச் செயலாளர் சார்பில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாவட்ட புள்ளி விவர உத்தியோகத்தர் மற்றும் நிலஅளவைத் திணைக்கள அதிகாரி என தலா ஆறு பேர் அதில் அங்கம் வகித்தனர்.

இந்தக்குழுவினர் தமது ஆய்வுகளை தற்போது சமர்ப்பித்து வருகின்றனர். இதன் முடிவுகளை அமைச்சின் செயலாளருக்கு அனுப்புவதற்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி, கிளிநொச்சியில் கண்டாவளை, முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு நகரம், மன்னார் மாவட்டத்தில் மடு போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் புதிய சபைகளும், யாழ்ப்பாண மாவட்டத்தில் வலி.தெற்கு, கரவெட்டி மற்றும் மானிப்பாய், நல்லூர் ஆகியவற்றுடன் காங்கேசன் துறை சபைகளோடு வவுனியா நகரசபை ஆகியவற்றை தரமுயர்த்துவது தொடர்பிலும் ஆய்வுகள் இடம்பெற்றன – என்றார்.

Related posts: