ஒப்பந்தக்காரர்களின் நிலுவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன் முன்னர் வழங்க நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, February 4th, 2023

நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இதுவரை நிதி வழங்கப்படாத ஒப்பந்தக்காரர்கள் அனைவருக்குமான நிதியை எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் போக்குவரத்து அமைச்சில் நிர்மாணத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட விசேட பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் செயற்படும் மகநெகும நிர்மாணப் பணிகள் மற்றும் வீதி நிர்மாணிப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டு அவர்களுக்கான நிதியை செலுத்துவது தாமதமாகியுள்ள நிலையில் அவ்வாறான நிறுவனங்களுக்கு எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடத்திற்கு முன்பதாக அனைத்து நிதியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் பெரும் நிதி நெருக்கடி நிலைமை காணப்படுகிறது. நிர்மாணப் பணிகள் தாமதமாகி நிலுவைப் பணத்தை செலுத்துவதிலும் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த வகையில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு உரிய நிதியை பெற்றுக் கொடுப்பதற்காக திறைசேரி மூலம் 11.6 பில்லியன் ரூபா நிதி திறைசேரி பிணைமுறி மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அந்த நிறுவனங்களுக்கான அனைத்து நிலுவைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க நேற்றையதினம் வழங்கப்பட வேண்டிய நிதியில் 40 வீதத்தை அனைத்து நிறுவனங்களினதும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்பதாக மேலும் 30 வீதத்தையும் ஏனைய 30 வீதத்தை தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்பதாக வழங்கி நிறைவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: