ஒக்டோபரில் எல்லை நிர்ணயம் பூர்த்தி:  ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல் – அமைச்சர் பைசர் முஸ்தபா !

Friday, September 30th, 2016

புதிய எல்லை நிர்ணயத்துக்காக நியமிக்கப்பட்ட குழுவினரின் பெரும்பாலான வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் அவற்றை நிறைவு செய்ய முடியுமெனவும் இதன்பிரகாரம் உள்ளூராட்சி சபை தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்ைகயில்,

கடந்த காலங்களில் எல்லை நிர்ணயத்தை தவறாக உருவாகியவர்களே இன்று நாம் தேர்தலை நடத்தாது தாமதிப்பதாக குற்றம்சாட்டுகின்றார்கள். எல்லை நிர்ணயத்துக்காக அமைக்கப்பட்ட குழு ஆய்வுகளை மேற்கொள்ளும் ​போதே கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தில் காணப்படும் குறைப்பாடுகளை இனம்காணமுடிந்துள்ளது.

இக்குழுவினர் பெரும்பாலான வேலைகளை நிறைவு செய்துள்ளார்கள். மாத்தறை, கிளிநொச்சி முல்லைதீவு, வவுனியா மன்னார் ஆகிய பிரதேசங்களிலுள்ள சிவில் அமைப்புகள், கட்சிகளின் கருத்துகள் மட்டுமே தற்போது பெறப்பட்டுள்ளன. இன்னும் இதுதொடர்பில் ஆராய்வதற்கு இக்குழுவினர் செல்லவில்லை. எனவே விரைவில் இப்பகுதிக்கான வேலைகளும் நிறைவடையும்.

உள்ளூராட்சி தேர்தலை கால தாமதமாகும் தேவை எங்களுக்கு இல்லை. எல்லை நிர்ணய வேலைகள் சரியான முறையில் நிறைவடைந்தவுடன் தேர்தலை நடாத்துவோம்.நாங்கள் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே எல்லை நிர்ணயக் குழுவினை அமைத்துள்ளோம். இக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் முன்னாள் காணி அமைச்சின் தலைவராகவிருந்தவர். அதே போல் ஏ.எஸ்.ஏம் மிஸ்பர், சாலிய, உபுல் குமரப்பெரும, பாலசுந்தரம் பிள்ளை ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பலர் நான் பொய் உரைப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் ஒருபோதும் நான் நாட்டை சீரழிக்கும் விதத்தில் நடந்துக்கொள்ள மாட்டேன். ஜனாதிபதி சகலருக்கும் சமவுரிமையை வழங்கும் விதத்தில் செயற்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே அதற்கவே எங்களுடைய வேலைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

unnamed (6)

Related posts: